சிங்கப்பூரில் உள்ள பெரிய குடும்பங்கள் தன்னிச்சையாகக் கூடுதல் ஆதரவைப் பெறவிருக்கின்றன.
“குடும்பங்கள் பெரிதாகும்போது அவற்றுக்கான சில தேவைகளும் அதிகரிக்கின்றன. எனவே, அவற்றுக்கான குறிப்பிட்ட சில அம்சங்களில் ஆதரவை அதிகரிக்கிறோம்,” என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் எஸ்ஜி குழந்தை ஆதரவுத் தொகுப்புத் திட்டம் மூலம் இன்னும் கூடுதலான நிதியாதரவைப் பெற்றுக்கொள்ளும்.
பெரிய குடும்பங்களின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கூடுதல் மெடிசேவ் நிரப்புத்தொகை வழங்கப்படும்.
தற்போது வழங்கப்படும் $5,000 பெரிய குடும்பங்களுக்கான மெடிசேவ் மானியம் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்கத் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
குறிப்பிட்ட அந்த மானியத்தைப் பெறாத பெரிய குடும்பங்களுக்கு எப்படி அதை வழங்குவது என்பது ஆராயப்படுகிறது.
மேலும், பெரிய குடும்பமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல அதிக செலவாகும் என்பதால் போக்குவரத்துத் தேவைகள் குறித்தும் அரசாங்கம் ஆராய்கிறது. போக்குவரத்து அமைச்சு அதற்கான வழிகளைப் பரிந்துரைக்கும்.
மூன்றாவதாகப் பெரிய குடும்பங்களுக்குப் பெரிய வீடுகள் தேவைப்படுவதால் அதற்கான செலவும் அதிகமாக இருக்கும் என்ற பிரதமர் வோங், கூடுதல் வீடமைப்பு ஆதரவு வழங்குவது பற்றி ஆராயும்படி உரிய அமைச்சிடம் கூறியிருப்பதாகச் சுட்டினார்.
“ஆக மொத்தத்தில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் முடிவு தனிப்பட்ட ஒன்று. கொள்கைகளால் மட்டும் அதைச் சாத்தியமாக்கிவிட முடியாது. ஆனால், பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தைத் தொடங்க விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு அதை அரசாங்கத்தால் சுலபமாக்கித் தர முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.


