தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பட்டதாரிகள் வேலை தேட கூடுதல் ஆதரவு: துணையமைச்சர் கான்

2 mins read
dca1dac2-7f00-4af7-8246-5061e2f7cd3c
பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் நடத்தப்பட்ட அண்மைய வருடாந்திர பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வுகள், புதிய பட்டதாரிகளில் குறைவான எண்ணிக்கையினரே 2024இல் முழுநேர வேலைவாய்ப்பைப் பெற்றதைக் காட்டுகின்றன. - படம்: சாவ் பாவ்

வேலைவாய்ப்புகள் சவால்மிக்கதாக உள்ள சூழலில், புதிய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் புதன்கிழமை (ஜூலை 9) கூறினார்.

வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் பட்டதாரிகளுக்கு உயர்கல்வி நிலையங்கள் உதவிகளை அதிகரித்து வருகின்றன.

வாழ்க்கைத்தொழில் பயிற்சி, தொடர்புகளை உருவாக்கும் வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஆகியவற்றை வழங்குவது, வாழ்க்கைத்தொழில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வது ஆகியவை அதில் அடங்கும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 புதிய பட்டதாரிகள், இறுதி ஆண்டு மாணவர்களுடன் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் கான் ஊடகங்களிடம் பேசினார்.

பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் நடத்தப்பட்ட அண்மைய வருடாந்திர பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வுகள், 2024இல் புதிய பட்டதாரிகளில் குறைவான எண்ணிக்கையினரே முழுநேர வேலைவாய்ப்பைப் பெற்றதைக் காட்டின.

பல்கலைக்கழகங்களிலிருந்து புதிதாகப் பட்டம் பெற்றவர்களில் 2024ல் 79.5 விழுக்காட்டினர் முழுநேர வேலைகளைப் பெற்றனர். இது 2023ஆம் ஆண்டின் 84.1 விழுக்காட்டைக் காட்டிலும் குறைந்தது.

2024இல் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளில் 54.6 விழுக்காட்டினர் முழு நேர நிரந்தர வேலைகளில் இருந்தனர், இது 2023இல் கிட்டத்தட்ட 60 விழுக்காடாக இருந்தது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்றவற்றால் பட்டதாரிகள் வேலைதேடுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டாலும், பெருமளவில், சிங்கப்பூரின் பொருளியல் தாக்குப்பிடிக்கக்கூடியதாகவே உள்ளது என்று கான் கூறினார்.

“தற்போதைக்கு, வேலைச் சந்தை சீராக உள்ளது. நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துகின்றன,” என்று பட்டதாரிகளுக்கு அமைச்சர் கான் நம்பிக்கையளித்தார். பரவலாக வேலைகளைத் தேடுமாறு அவர் பட்டாதாரிகளிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்