சிங்கப்பூரின் தென்தீவுகளின் கடல்வளச் சூழல், கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, அப்பகுதியிலுள்ள மேற்குத் தீவுகளில் எதிர்காலத்தில் நிலமீட்புப் பணிகளை மேற்கொள்வதற்குமுன் விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தவும் உரிய பங்காளிகளுடன் கலந்தாலோசிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நிலமீட்புப் பணிகளால் அப்பகுதியிலுள்ள முதிர்ந்த இயற்கை வாழ்விடங்களுக்கு மீளமுடியாத இழப்பு ஏற்படும் என்பதால், விரிவான ஆய்வுகளும் பொதுமக்களின் கருத்துக்கேட்பும் அவசியம் என அறிவியலாளர்களும் இயற்கை ஆர்வலர் குழுக்களும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலதித்த தேசிய வளர்ச்சி அமைச்சின் பேச்சாளர், நிலமீட்பு வடிவம் உட்பட எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிகாட்டும் வகையில் சாத்தியக்கூறு ஆய்வுகள், களப் பரிசோதனைகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் தொழில்துறை, எரிசக்தி, தற்காப்புத் தேவைகளுக்காகச் சில தென்தீவுகளை ஒருங்கிணைத்து வருங்காலத்தில் நிலமீட்பு மூலம் புதிய மேற்குத் தீவு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
தேசிய பூங்காக் கழகத்தின் தரவுகளின்படி, நிலமீட்புப் பகுதிக்குள் வரக்கூடிய வாழ்விடங்கள், பவளப்பாறைகளின் பரப்பளவு ஏறக்குறைய 592.8 ஹெக்டர் ஆகும். இது, செந்தோசாத் தீவைவிட பெரியது என்பதுடன், தென்தீவுகளின் மொத்த அலை இடைவெளிப் பகுதியில் பாதிக்கும் அதிகமாகும்.
ஹந்து, செமக்காவ் தீவுகளிலுள்ள பவளப்பாறைகள் ஏறத்தாழ 8,000 ஆண்டுகள் பழைமையானவை என்றும் அவை பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் தேசிய கடல், பெருங்கடல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஹுவாங் டான்வெய் தெரிவித்தார்.
இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அதிகபட்சமாகப் பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹந்து, செமக்காவ் தீவுகளில் உள்ள பவளப்பாறைகளும் அப்பகுதியில் உள்ள மற்றவையும் மனித நடவடிக்கைகளுக்கு நடுவிலும் இயற்கை வாழிடங்கள் எவ்வாறு தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக திரு ஹுவாங் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே 1998, 2010, 2016, 2024ஆம் ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட பவளப்பாறைகள் வெளுத்துப்போன நிகழ்வுகளுக்குப் பிறகும் அவை மீண்டுவந்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


