தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும்: பிரதமர் வோங்

3 mins read
நீண்டகாலப் பராமரிப்பும் வாழ்விட ஏற்பாடுகளும் மிக முக்கியமான அம்சம் என்று கூறினார்
2d772f58-e5b5-4d6f-9994-d29e9cdc7a86
முதியோர் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

முதியவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் தேசியத் திட்டமான ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ (Age Well SG) மூலம் முதியவர்களை மேலும் உள்ளடக்கும் வகையிலான வாழ்விடச் சூழல் உருவாக்கப்படுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் முதியவர்கள் மேலும் துடிப்பான, மனநிறைவான வாழ்க்கையை வாழ உதவுவதும் அவர்கள் தனிமையை உணராமல் தவிர்ப்பதும் இத்திட்டத்தின் இலக்குகள்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) இந்த ஆண்டுக்கான (2025) தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது திரு வோங் அவ்வாறு கூறினார்.

சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் (EASE) மூலம் வீடுகளில் மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறுவதையும் அக்கம்பக்கத்தில் முதியவர்களுக்கு உகந்த சாலைகள், குணப்படுத்தும் தோட்டங்கள், முதியவர்க்கான உடலுறுதித் திடல்கள் போன்றவை அமைக்கப்படுவதையும் அவர் சுட்டினார்.

முதியோர் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கூடுதலான முதியவர்கள் துடிப்பான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளத் தங்கள் பங்கை ஆற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் சொன்னார்.

எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும் ‘ஆஹ் மா ஃபிலிப்பா’ பந்துக் குழுவினரின் உற்சாகக் குரல்கள் இயோ சூ காங் நீச்சல்குள வளாகத்தில் நிறைந்திருக்கும் என்றார் அவர்.

‘ஆஹ் மா ஃபிலிப்பா’ பந்துக் குழுவினர்.
‘ஆஹ் மா ஃபிலிப்பா’ பந்துக் குழுவினர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இந்தக் குழுவில் 60, 70, 80 எனப் பல்வேறு வயதினர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் நீரில் விளையாடும் போலோ விளையாட்டு போன்றதொரு விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

‘ஃபிலிப்பா’ பந்து விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுவதுடன் தங்களுக்கிடையே வலுவான நட்பையும் பேணுகின்றனர். அத்துடன் குழுவாகப் பயணம் மேற்கொள்ளுதல், பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், வாழ்வின் மகிழ்ச்சியான நேரங்களிலும் சவாலான நேரங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் என உற்சாகமாகச் செயல்படுகின்றனர் என்றார் திரு வோங்.

முதியவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று கூறிய அவர், இருப்பினும் நீண்டகாலப் பராமரிப்பும் வாழ்விட ஏற்பாடுகளும் மிக முக்கியமான அம்சம் என்றார்.

சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் (CCAs) திட்டம் இதற்கான தீர்வுகளில் ஒன்றாகும். தேசிய வளர்ச்சி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தின்கீழ், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் முதியவர்களுக்கான வீடமைப்பும் பராமரிப்பு அமைப்பும் இணைத்து வழங்கப்படுகிறது.

இத்தகைய வீடுகளில், சக்கர நாற்காலியோடு உள்நுழையக்கூடிய கழிவறைகள், வழுக்காத தரை என்பன போன்ற முதியோர்க்கு உகந்த அம்சங்கள் இடம்பெறுகின்றன.

சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளில் முதியோர்க்கு உகந்த அம்சங்கள் இடம்பெறுகின்றன.
சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளில் முதியோர்க்கு உகந்த அம்சங்கள் இடம்பெறுகின்றன. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

வீட்டில் பழுதுபார்ப்புப் பணிகள், சுகாதாரப் பரிசோதனை, வீட்டு வேலை போன்ற சேவைகளுக்கு இவற்றில் வசிக்கும் முதியோர் பதிந்துகொள்ளலாம். ஒவ்வொரு புளோக்கிலும் இத்தகைய சேவைகளை ஒருங்கிணைக்கும் முழு நேர ஊழியர்களுடன் கூடிய நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் என்பதைத் திரு வோங் சுட்டினார்.

அந்த நிலையத்தில் முதியவர்கள் அன்றாடம் ஒன்றுகூடி, நண்பர்களுடன் அளவளாவுவதுடன் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியிலிருப்பர். முதியவர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் அந்த ஊழியர்கள் உடனடியாக உதவுவர்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ‘சிசிஏ’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட முதல் அடுக்குமாடிக் குடியிருப்பான ‘ஹார்மனி வில்லேஜ்@புக்கிட் பாத்தோக்’ குடியிருப்புக்குத் தாம் சென்றிருந்ததாகக் கூறிய பிரதமர் அங்குள்ள குடியிருப்பாளார்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

இனிவரும் ஆண்டுகளில் கூடுதலான ‘சிசிஏ’ குடியிருப்புகள் கட்டப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்