சிங்கப்பூரின் எரிபொருள் விநியோகம் தற்போதைக்கு நிலையாக உள்ளது. இருப்பு குறையவில்லை என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் வியாழக்கிழமை (மார்ச் 26) கூறியுள்ளார்.
எனினும், எரிபொருள் விலை உயர்வு போக்குவரத்துச் சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் தலையிட வேண்டிய தேவை இருக்கிறதா என்பதை மதிப்பிட அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று திரு சியாவ் கூறினார்.
மத்திய கிழக்குப் போரினால் சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஆதரவு போன்றவை குறித்து அவர் டகோட்டா ரயில் நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசினார்.
வட்டரயில் பாதையின் சுரங்கப் பாதையைப் பலப்படுத்தும் பணிகளை டகோட்டா பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள சுரங்கப்பாதையில் அமைச்சர் பார்வையிட்டார்.
எரிபொருள் விலை உயர்வை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது
சிங்கப்பூர் எரிபொருள் விநியோகம் நிலையாக இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மூத்த துணை நிதி அமைச்சருமான திரு சியாவ் குறிப்பிட்டார்.
“தற்போது நாட்டின் எண்ணெய் இருப்பு குறையவில்லை. சிங்கப்பூரின் விநியோகப் பாதைகளும் செயல்பாட்டில் உள்ளன,” என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடுத்துக்காட்டாக, விமான நிறுவனங்கள் விமானச் சீட்டுக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. வாடகை வாகன சேவை, விநியோக சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்கியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எனினும், ஒட்டுமொத்தத்தில் நிலைமை தற்போது நிலையாக உள்ளது. அரசாங்கம் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. தேவை ஏற்பட்டால் அரசாங்கம் தலையிடும் என்று திரு சியாவ் தெரிவித்தார்.
ஈரான் மோதலால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பை தரை, வான், கடல் அனைத்துப் போக்குவரத்திலும் பயணிகள் உணர்கின்றனர். சில விமான நிறுவனங்கள், பெரும்பாலான படகு சேவை நிறுவனங்கள் எரிபொருள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன அல்லது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளன.
வாகன ஓட்டிகளும் எண்ணெய்க்கு அதிக கட்டணம் செலுத்துகின்றனர். மார்ச் 26 ஆம் தேதி நிலவரப்படி கால்டெக்ஸ்,எஸ்சோ, சினோபெக்கில் 95 ஆக்டேன் தர பெட்ரோல் விலை லிட்டருக்கு $3.47 ஆக உள்ளது. ஷெல் நிறுவனம் லிட்டர் $3.42 ஆக விற்கிறது. எஸ்பிசி லிட்டருக்கு $3.46 கட்டணம் வசூலிக்கிறது. சிநெர்ஜி குறைவாக லிட்டர் $2.48 என விற்கிறது.
அதே தர பெட்ரோல் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதலுக்கு முன்னர் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டருக்கு $2.88 என விற்கப்பட்டது.

