வாழ்க்கைச் செலவினத்தைக் கையாள ஒவ்வொரு விதமான ஆதரவும் முக்கியம் என்றும் சிங்கப்பூரர்களுக்குத் தேவைப்படும்வரை அவர்களுக்கு உதவ அரசாங்கம் தேவையானவற்றை தொடர்ந்து செய்யும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
தமது சமூக ஊடகப் பக்கங்களில் திங்கட்கிழமை (மார்ச் 3) பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில், சிங்கப்பூரர்கள் பலரின் மிகப்பெரிய கவலை வாழ்க்கைச் செலவினத்தைப் பற்றியதே என்பதைப் பிரதமர் வோங் ஏற்றுக்கொண்டார்.
“விலைகள் ஏறிவிட்டன. இதனால் பல குடும்பங்களுக்கும் சிரமமாக உள்ளது. மளிகைப் பொருள் வாங்கும்போது, கட்டணம் செலுத்தும்போது, அன்றாடச் செலவுகளைக் கையாளும்போது அவர்கள் இதை உணர்கின்றனர்,” என்றார் அவர்.
விலைவாசி உயர்வைச் சமாளிக்க, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூடுதல் உதவி வழங்கியதைப் பிரதமர் வோங் சுட்டினார்.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு, வாழ்க்கைச் செலவினத்தை மேலும் மோசமடையச் செய்துள்ளதா எனச் சிலர் நினைப்பதாக அவர் சொன்னார்.
“ஆனால், உண்மை நிலவரப்படி நாம் எதிர்கொள்வது ஜிஎஸ்டிக்கும் அப்பாற்பட்டதே,” என்றார் நிதி அமைச்சருமான பிரதமர் வோங்.
போர்களாலும் விநியோகத் தொடரில் இடையூறு ஏற்பட்டதாலும் உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிய அவர், அதிலிருந்து எந்தவொரு நாடும் விட்டுவைக்கப்படவில்லை என்றார்.
சிங்கப்பூரும் அதே நெருக்குதல்களை உணர்வதாக அவர் சொன்னார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு, கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் சிங்கப்பூர் நிச்சயமற்ற நிலையைச் சந்தித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்தகால நிதியிருப்பில் இருந்து ஐந்துமுறை பணமெடுக்க அதிபரிடமிருந்து அரசாங்கம் ஒப்புதல் பெறவேண்டியிருந்தது. கொவிட்-19 நெருக்கடி காலத்தின்போது $40 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் எடுத்தது.
“கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீள, மக்களுக்காக வேலைகளை உருவாக்க, மூத்தோரைப் பார்த்துக்கொள்ள எங்களிடம் போதுமான வளங்கள் இருந்தனவா என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார் பிரதமர் வோங்.
சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே சென்றதாகக் கூறிய அவர், சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால் அது தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.
ஜிஎஸ்டியை உயர்த்துவது எளிதான முடிவன்று. ஆனால், அது ஒரு தேவையான, பொறுப்பான செயல் என்பதை அரசாங்கம் உணர்ந்தது. இதனாலேயே, பொருளியல் நிலைப்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டதாக பிரதமர் வோங் விளக்கினார்.
பெரும்பாலான சிங்கப்பூர்களுக்கு ஜிஎஸ்டி உயர்வின் தாக்கத்தை மட்டுப்படுத்த, வரி உயர்வுடன் சேர்த்து உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தையும் அரசாங்கம் செயல்படுத்தியது குறித்தும் பிரதமர் நினைவூட்டினார்.

