நெருக்கடிநிலை மோசமானால் அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கும்: பிரதமர் வோங்

நெருக்கடிநிலை மோசமானால் அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கும்: பிரதமர் வோங்

2 mins read
மே தினப் பேரணி உரை
0d64315a-96e6-4907-89b7-398fa8495b0f
மே தினப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்போதைய நெருக்கடிநிலை மேலும் மோசமானால் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் மேலும் உதவிக்கரம் நீட்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் மேலும் சிரமமான காலகட்டத்திற்குச் சிங்கப்பூரர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டாலும் நிலைமை உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பாது என்றும் நிலைமை மேம்பட குறைந்தது சில மாதங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அந்தத் தாக்கத்தை நேரடியாக உணரும் என்ற அவர், நாடு அதற்குத் தயாராக இருப்பதாகவும் சிங்கப்பூர் இன்று மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

“இன்று, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சிங்கப்பூர் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. நமது ஊழியர்களாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் எடுத்த முடிவுகளாலும்தான் இந்த நெருக்கடியை வலுவான நிலையிலிருந்து நம்மால் எதிர்கொள்ள முடிகிறது,” என்றார் நிதி அமைச்சருமான திரு வோங்.

டௌன்டவுன் ஈஸ்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 1) மே தினப் பேரணி உரையாற்றியபோது திரு வோங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிநிலை மேலும் தீவிரமாகலாம் என அனைத்துலக எரிசக்தி அமைப்பு எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திரு வோங், உலகின் முன்னணி எரிசக்தி நிறுவனங்கள் சிங்கப்பூரில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு, எண்ணெய்ச் சேமிப்பு, எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

“விநியோகத் தொடர் மீள்திறனை வலுப்படுத்தவும் பரஸ்பர ஆதரவை வழங்கவும், ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது,” என்றார் பிரதமர்.

அதே நேரத்தில், சிங்கப்பூரர்களுக்கும் எரிசக்தி விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

குடும்பங்களுக்கு யு-சேவ் தள்ளுபடி, மேம்படுத்தப்பட்ட வழங்குதொகை, சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை முன்னரே வழங்க ஏற்பாடு போன்றவை அந்த உதவிகளில் அடங்கும் என்றார் திரு வோங்.

இருப்பினும், முடிந்தவரை ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.

தமது உரையின் இறுதியில், பூசல்கள், இடையூறுகள், அதிவிரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை நிறைந்த எதிர்காலப் பாதை எளிதாக இருக்காது என்று பிரதமர் வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்