மனிதவளப் பிரிவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் ஊழியர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக அரசாங்கத்திடம் எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் ஊழியரணியைப் பாதுகாக்கப் போதுமான விதிமுறைகளும் வழிமுறைகளும் நடப்பில் உள்ளதை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் கூறினார்.
“வேலை நடைமுறைகள், ஊழியர்கள், வேலை விண்ணப்பங்கள் ஆகியவற்றில் ஒருசில செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் பாரபட்சம் காட்டப்படுவதாகத் தெரியவந்தால் அதுபற்றி நியாயமான, முன்னேற்ற வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியிடம் (Tafep) முறையிடலாம்.
“அவ்வாறு முறையிடப்பட்டால், ஊழியர்கள் அல்லது வேலை விண்ணப்பங்கள் தொடர்பான குறைகளைக் கவனிக்க நிறுவனங்களுடன் இணைந்து கூட்டணி செயல்படும்.
“நிறுவனங்களின் வேலை நியமனமும் ஊழியரின் செயல்திறன் மதிப்பீட்டு நடைமுறைகளும் நியாயமான வேலைவாய்ப்பின் கொள்கைகளுக்கு இணங்க நடைபெறுவதை உறுதிசெய்யவும் அந்தக் கூட்டணி இணைந்து செயல்படும்,” என்று டாக்டர் டான் புதன்கிழமை (நவம்பர் 13) தெரிவித்தார்.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாடு காரணமாக ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டப்பட்டதாக அந்தக் கூட்டணி இதுநாள் வரை எந்த ஒரு புகாரையும் பெறவில்லை என்று அவர் உறுதிபடக் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போக்கு பற்றி அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிப்பதோடு அது தொடர்பாக முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றும்.
“அத்துடன், நடப்பில் உள்ள விதிமுறைகளும் வழிமுறைகளும் போதுமானவைதானா என்பதை தொடர்ந்து ஆராய முத்தரப்புக் கூட்டணி, மனிதவள நிபுணர் கல்விக்கழகம் ஆகியவற்றுடன் விரிவான மனிதவள சமூகத்துடனும் அரசாங்கம் இணைந்து செயல்படும்,” என்றார் டாக்டர் டான்
தொடர்புடைய செய்திகள்
பயனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அமைச்சர் பேசினார்.
நிறுவனங்கள் யோசித்து முடிவெடுப்பதில் உதவியாக அல்லது மாற்றாக செயற்கை நுண்ணறிவு கணிசமாகப் பயன்படுத்தப்படுவது வேலை நியமனத்திலும் பதவி உயர்விலும் பாகுபாட்டை ஏற்படுத்தும் என்ற கவலை தமக்கு இருப்பதாக திரு டே தமது கேள்வியில் குறிப்பிட்டு இருந்தார்.
வேலைக்கு விண்ணப்பம் செய்வோரை தரப்படுத்துவதிலும் பதவி உயர்வுக்காக ஊழியர்களை மதிப்பிடுவதிலும் செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்துவதில் நிறுவனங்கள் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டான், “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் விரைவாக வளர்ந்து வந்தாலும் அவற்றை மிதமிஞ்சிப் பரிந்துரைப்பது என்பது அரசாங்கத்தின் நடைமுறையாக இருக்காது,” என்றார்.