சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவினங்களைச் சமாளிக்க அரசாங்கத்தின் செலவு புதிய ஆட்சிக் காலத்தில் அதிகரிக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
எனினும், அரசாங்கம் சமநிலையான வரவுசெலவுக் கணக்கை கொண்டிருக்கும் என்றார் அவர்.
அரசாங்கம் தொடர்ந்து அதன் வரம்புக்குள்தான் செலவு செய்யும் என்று திரு வோங் உறுதிகூறினார்.
செலவினத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வருமான அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அரசாங்கம் இதற்குமுன் வரிச் சீர்திருத்தங்களைச் செய்தது என்ற திரு வோங், நிதி அமைச்சு கவனமாக, பயன்தரும் வகையில் நிதி வளங்களைப் பயன்படுத்தும் என்றார்.
அதிபர் உரையின் பிற்சேர்க்கையை முன்வைத்த திரு வோங், உலக அளவில் தனது இடத்தைத் தக்க வைக்க சிங்கப்பூர் எவ்வாறு கூடுதல் வளங்களை முதலீடு செய்யும் என்பதை விளக்கினார்.
நிச்சயமற்ற உலகில் பொருளியலை மாற்றியமைத்து, பிணைப்பை வலுப்படுத்தும் வழிகளையும் அவர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சு அனைத்தையும் சரிபார்த்து திட்டங்களை நன்கு ஆராய்ந்து வளங்களை ஒதுக்கீடு செய்யும் என்று திரு வோங் சொன்னார்.
“நமது நிதிக் கொள்கைகள் துடிப்புமிக்க பொருளியலையும் உறுதியான சமூகப் பிணைப்பையும் உறுதிப்படுத்தும் இலக்கு கொண்டவை. அது வாய்ப்புகளை வழங்குவதோடு அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உயர்தர வாழ்க்கை கிடைக்க வழியமைக்கும்,” என்றார் திரு வோங்.
இம்மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியபோது அதிபர் தர்மன் சண்முகரத்னம் வெவ்வேறு அமைச்சுகளின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் குறித்து அறிவித்தார். இந்த வாரம் முழுவதும் ஒவ்வோர் அமைச்சும் அவற்றின் திட்டம் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டன.
சிங்கப்பூரின் வரிக் கட்டமைப்பும் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து நியாயமானதாக இருக்கும் என்ற பிரதமர் வோங், வசதியுள்ளோர் கூடுதலாகக் கொடுப்பார்கள், வசதி குறைந்தோர் கூடுதலாகப் பெறுவார்கள் என்றார்.
சிங்கப்பூரின் நிதியிருப்பையும் அரசாங்கம் தொடர்ந்து பொறுப்புடன் பயன்படுத்தும் என்றும் திரு வோங் உறுதிகூறினார்.
உலக அரங்கில் சிங்கப்பூரின் இடத்தை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து தற்காப்பு, பாதுகாப்பு, முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றில் முதலீடு செய்யும் என்று திரு வோங் சுட்டினார்.
இந்த முயற்சிகள் அனைத்துக்கும் கூடுதல் வளங்கள் தேவை என்றபோதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவை அவசியமானவை என்று திரு வோங் வலியுறுத்தினார்.