சிங்கப்பூர், வெற்றிப் பாதையில் செல்ல இதுவரை உறுதுணையாக இருந்த உலகச் சூழல் இப்போது மாறி வருகிறது; ஆகையால் அனைத்துலக அரங்கில் தனது தலையெழுத்தை தானே வடிவமைப்பதற்கான முயற்சிகளை சிங்கப்பூர் தொடர்ந்து எடுத்து வருகிறது என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
ஆசியானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே கையெழுத்தாகக்கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஆசியான் மேலும் ஒன்றுபட்டு இருப்பது, சிங்கப்பூருக்கு ஆக அருகில் இருக்கும் நாடுகளான மலேசியா, இந்தோனீசியாவுடன் கூடுதல் அம்சங்களில் ஒத்துழைப்பு இருப்பது அம்முயற்சிகளில் அடங்கும். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காணொளிவழி திரு வோங் இத்தகவல்களை வெளியிட்டார்.
“தற்போது நாம் தேர்தல் பிரசாரத்துக்கு நடுவில் இருக்கிறோம். எனினும், சிங்கப்பூரை ஆள்வது என்றும் நின்றுவிடாது,” என்று திரு வோங் குறிப்பிட்டார். “நானும் எனது குழுவினரும் சேவையாற்றுவதை என்றும் நிறுத்தமாட்டோம் - உங்களுக்காகவும் சிங்கப்பூருக்காகவும்.”
மாறிவரும் உலகில் தமது குழுவின் இலக்கு தெளிவாக இருப்பதாக அவர் சொன்னார்; சிங்கப்பூரரக்ளுக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித்தர சிங்கப்பூர் ‘புயலை’ கடக்கவைப்பதே தங்கள் இலக்கு என்றார் அவர்.
உலக நாடுகள் மீது அமெரிக்க அரசாங்கம் வரிவிதித்திருப்பது போன்ற விவகாரங்களால் நிலையற்ற பொருளியல் சூழல் நிலவுகிறது. அதற்கு மத்தியில் வரும் மே மாதம் முன்றாம் தேதி சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது.
அதோடு, பிரதமராகவும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளராகவும் திரு வோங் சந்திக்கும் முதல் தேர்தல் இது.
திரு வோங், தமது யூடியூப் பக்கத்தில் இக்கருத்துகளை உள்ளடக்கிய நான்கு நிமிடக் காணொளியை வெளியிட்டார். சிறிய நாடான சிங்கப்பூர் தற்போதைய உலக விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது சிரமம். அதேவேளை, சிங்கப்பூர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நாடும் அல்ல என்று அவர் அக்காணொளியில் சுட்டினார்.
“நமது தலையெழுத்தை செதுக்க நம்மால் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள முடியும்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார். சிங்கப்பூர், சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்ததைவிட இப்போது கூடுதல் ஆற்றலுடனும் அதிக தொடர்புகளுடனும் இருக்கிறது என்றும் அவர் விளக்கினார்.