தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை

3 mins read
e7661c4e-468d-409e-a6c2-37c4dec0f711
முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பாரம்பரியமாகக் கொண்டுள்ள கட்டுப்பாட்டு உறவுகளுக்கு அப்பால் அரசாங்கம் செயல்பட வேண்டிய தேவையிருப்பதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் சிலவற்றின் உரிமையாளர்களுக்கு இணைய அச்சுறுதல்களை முறியடிப்பதில் கூடுதல் உதவி கிடைக்கவிருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள், கட்டமைப்புகளின் ஆற்றலைச் சோதித்துப் பார்க்கவும் உதவி நல்கப்படும்.

அச்சுறுத்தல்கள் குறித்த ரகசியத் தகவல்களை முக்கியத் துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் அரசாங்கம் முதன்முறையாகப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறது. எரிசக்தி, தொலைத்தொடர்பு, நிதி முதலியவை அவற்றுள் சில. தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இணையத் தாக்குதல்களைத் தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம்.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம், சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அதனை அறிவித்தார். மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் அதன் தொடர்பிலான கருத்தரங்கு திங்கட்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை (அக்டோபர் 20-23) நடைபெறுகிறது.

முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பாரம்பரியமாகக் கொண்டுள்ள கட்டுப்பாட்டு உறவுகளுக்கு அப்பால் அரசாங்கம் செயல்பட வேண்டிய தேவையிருக்கிறது. நாடுகளின் ஆதரவோடு அதிநவீன முறையில் இணைய மிரட்டல்களை விடுப்போரை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகத் திரு சண்முகம் தெரிவித்தார்.

இணையத்தில் தாக்குதல் நடத்துவோருக்கும் அதனைத் தற்காப்போருக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த அரசாங்கத்தின் அணுகுமுறையில் அந்த முக்கிய மாற்றம் தேவைப்படுவதாக அவர் சொன்னார். அந்த மாற்றம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு எதிரான நெருக்குதலை அதிகரிக்கும் என்று அமைச்சர் சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரம் நிறுவனங்கள் மீள்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். ஆற்றல் குறைந்த வேளையிலும் தொடர்ந்து இயங்கக்கூடிய நிலையில் அவை இருக்கவேண்டும். சிங்கப்பூர் அதிநவீன அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அவர்களில் சிலர் இணையத் தாக்குதல்களில் வெற்றிபெறக்கூடிய சாத்தியமும் இருப்பதாகத் திரு சண்முகம் எச்சரித்தார். அதனால்தான் அரசாங்கத்தின் முக்கியத் துறைகளுக்கும் தொழில்நுட்பப் பங்காளித்துவ நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முக்கியமாகிறது என்றார் அவர்.

ரகசியத் தகவல்களைப் பகிரவும் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்தவும் இணைய அச்சுறுத்தல்காரர்கள் பயன்படுத்திய கட்டமைப்புகளை முடக்கவும் அத்தகைய ஒத்துழைப்பு உதவும் என்று திரு சண்முகம் சுட்டினார்.

சிங்கப்பூர், தொடர்ந்து மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி எடுக்கும். உலக அளவில் விதிமுறைகள் சார்ந்த இணைய ஒழுங்கு நடவடிக்கைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இணையத் தாக்குதல்கள் வரலாம் அவை இடையில் பல பாதைகள் மாறியும் வரலாம் என்றார் அமைச்சர் சண்முகம்.

யுஎன்சி3886 எனும் சீனாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட இணைய உளவுக் குழு சிங்கப்பூரில் தாக்குதல்கள் நடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து நாட்டின் இணையத் தற்காப்பை வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் தொடர்ந்து அத்தகைய தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் திரு சண்முகம் சொன்னார்.

“நமது அரசியல் சூழலும் நமது மின்னியல் தொடர்பும் தாக்குதல்காரர்களை ஈர்க்கின்றன,” என்றார் அவர்.

இணையத் தாக்குதல்களைக் கையாள்வதில் சிங்கப்பூரின் அணுகுமுறையை அவர் விவரித்தார்.

கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, அதிகரித்துவரும் மிரட்டல்களைச் சமாளிக்க முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் தயாராகவும் இருக்கவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் இணையத் தாக்குதல்கள் நடத்துவோரை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது. இங்குள்ள இலக்குகளைத் தாக்கினாலும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு வேறு நாடுகளைத் தாக்கினாலும் அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்