தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்க அதிகாரிபோல் நடித்து மோசடி; மாது மீது குற்றச்சாட்டு

1 mins read
49dca6a6-9044-471f-b6d3-c2763a647b72
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க அதிகாரியைப்போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாதுமீது திங்கட்கிழமை (ஜூன் 16) குற்றம் சுமத்தப்பட்டது.

இம்மாதம் இரண்டாம் தேதியிலிருந்து 11ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் காவல்துறையிடம் புகார்கொடுத்ததைத் தொடர்ந்து மாதின்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை வங்கிக் கடன் அட்டை ஒன்றுக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகளைப் போல் நடித்து மோசடிக்காரர்கள் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மாற்றியதாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடன் அட்டைக்குச் சொந்தக்காரரும் அந்த மோசடிக்கு ஆளானது விசாரணையில் தெரியவந்தது. அந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பித்து பின்னர் அதன் விவரங்களை மோசடிக்காரரிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரான கினா கினர்ஜி சுவா எனும் 48 வயது மாது சனிக்கிழமை (ஜூன் 14) கைது செய்யப்பட்டார். அந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி நகைக் கடை ஒன்றில் 12,000 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள தங்கச் சங்கிலியை வாங்க முயன்றபோது சந்தேக நபர் கைதானார்.

தனக்குச் சொந்தமில்லாத பல வங்கிக் கடன் அட்டைகளைக் கொண்டு அந்த மாது, அனுமதியின்றி 262,000 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொண்டது பிறகு தெரியவந்தது. அவர் எப்படி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்