கிராப் நிறுவனம் அதனிடம் உள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கும் கிராப் சேவை வழங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை 50,000க்கும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பசுமைத் திட்டத்துக்கு உட்படும் போக்குவரத்து முறைக்கு மாற கிராப் நிறுவனம் கொண்டுள்ள திட்டத்தை இது பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கிராப் நிறுவனமும் சீனாவைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான பிஒய்டியும் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துப் பயணிகள் கட்டண அதிகரிப்பு ஏதுமில்லாமல் சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய இந்த மின்சார வாகனப் பயணத் தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால், தென்கிழக்காசிய நாடுகளில் மின்சார வாகனங்களைப் பேரளவில் பயன்படுத்துவது தொடர்பில் உள்ள சவால்கள் தொடர்கின்றன.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள மின்சார வாகன உள்கட்டமைப்புகளைப் போல இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளில் இல்லை என்று போக்குவரத்துத்துறை பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
கிராப் போன்ற தனியார் வாடகை கார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பேரளவில் பயன்படுத்தும்போது சிங்கப்பூரில் அவற்றுக்கான மின்னூட்டு வசதிகள் உள்ளனவா என்ற கேள்வியை போக்குவரத்துத்துறை பகுப்பாய்வாளர்கள் எழுப்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பிஒய்டி நிறுவனத்துடனான பங்காளித்துவத்தின் விளைவாகத் தனது ஓட்டுநர்கள் போட்டித்தன்மைமிக்க விலையில் பிஒய்டி வாகனங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்றும் மின்கல உத்தரவாத காலகட்டத்தை நீட்டிக்கலாம் என்றும் கிராப் கூறியது.
கம்போடியா, இந்தோனீசியா, மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் கிராப் நிறுவனம் தனியார் வாடகை கார் சேவை வழங்குகிறது.
50,000 மின்சார வாகனங்களும் எட்டு தென்கிழக்காசிய நாடுகளிடையே எவ்வாறு பிரிக்கப்படும் என்று சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் கிராப் தெரிவிக்கவில்லை.