கிராப் குழுமத்தின் காப்புறுதிப் பிரிவான கிராப்இன்ஷோர், சிங்கப்பூரின் வாகன காப்புறுதிச் சந்தைக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது.
தற்போது அச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திவரும் இன்கம் இன்ஷுரன்ஸ் போன்றவற்றுக்கு இச்செய்தி கவலை தரக்கூடும் என்று தொழில்துறை கவனிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
கிராப், கடந்த மே மாதம் பொதுக் காப்புறுதிச் சங்கத்தில் (General Insurance Association) சேர்ந்தது. அதற்கு வழிவழக்கும் பொதுக் காப்புறுதி உரிமத்தை அந்தக் குழுமம், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையத்திடமிருந்து பெற்றது.
அந்த வகையில், அக்குழுமம் தனது சொந்த வாகனக் காப்புறுதித் திட்டங்களை வழங்கத் தயாராகி வருகிறது. கிராப், கடந்த சில மாதங்களாக அதன் வாகனக் காப்புறுதிப் பிரிவுக்காக ஊழியர்களை வேலைக்கு எடுத்துவந்துள்ளது.
அத்தகைய வேலை வாய்ப்புகளில் ஒன்று, வாகன கோரிக்கைத் தொகைத் (motor claims) தலைமைப் பொறுப்பாகும். அவ்வேலைக்கு விளம்பரம் செய்யப்பட்டது.
அப்பொறுப்பை வகிப்பவர், ஒன் நார்த் வட்டாரத்தில் உள்ள கிராபின் தலைமையக வளாகத்தில் பணிபுரிவார் என்றும் அவர் குழுமத்தின் வாகன கோரிக்கைத் தொகை சம்பந்தப்பட்ட உத்தி, லாபம் ஈட்டும் ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களைக் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.