கிராப் நிறுவனம், சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான எல்லை தாண்டிய வாடகை கார்ச் சேவை வழங்குவதற்கான முதல் உரிமத்தைப் பெற்றுள்ளது.
இணையவழி ஊழியர்கள் வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகளை இது உருவாக்கியருப்பதாகக் கருதப்படுகிறது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 30) இந்த உரிமத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியது. மூன்று ஆண்டுகளுக்கான இந்த அனுமதி உடனடியாக நடப்புக்கு வந்ததாகக் கூறப்பட்டது. இனி, கிராப் தளம் வாயிலாகப் பயணிகள் எல்லை தாண்டிய டாக்சிச் சேவைக்குப் பதிவு செய்துகொள்ளலாம்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே பயணிகளுக்குக் கூடுதல் போக்குவரத்துத் தெரிவுகளையும் மேம்பட்ட வசதியையும் இந்த உரிமம் சாத்தியமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எல்லை தாண்டிய டாக்சிச் சேவைத் திட்டத்தின் புதிய, மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் மே 4ஆம் தேதி நடப்புக்கு வருகின்றன. இதன்கீழ், இத்தகைய சேவை வழங்கும் டாக்சிகள் சிங்கப்பூர், ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, கூலாய், செனாய் ஆகிய இடங்களில் பயணிகளை எங்கு வேண்டுமானாலும் இறக்கிவிட முடியும்.
மேலும், டாக்சிகள் அவை பதிவுசெய்யப்பட்ட நாட்டில் பயணிகளை ஏற்றிக்கொள்வதன் தொடர்பில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. சிங்கப்பூர் டாக்சிகளுக்கு மலேசியாவிலும் மலேசிய டாக்சிகளுக்குச் சிங்கப்பூரிலும் கூடுதலாக மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சேவைக்கான உரிமம் பெற்ற டாக்சிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது கட்டாயம். டாக்சியின் உச்சியில் அதற்குரிய அறிவிப்புப் பலகை, எல்லை தாண்டிய சேவை வழங்குவதற்கான தெளிவான ஒட்டுவில்லைகள், வாகனப் பதிவெண் பலகையில் அதற்கான எழுத்துகள் ஆகியவற்றை அந்த டாக்சிகளில் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வேளையில், பயணிகள் இனி சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே கிராப் கைப்பேசிச் செயலியின் புதிய சேவை வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும் என்று கிராப் நிறுவனம் தெரிவித்தது. ‘Cross-Border SG-JB (beta) pilot’ என்பது புதிய சேவையின் பெயர்.
தொடர்புடைய செய்திகள்
பயணத் தேதிக்கு ஏழு நாள்கள் முன்பிலிருந்து பயண நேரத்துக்கு 12 மணி நேரத்திற்கு முன்பு வரை முன்பதிவுகளைச் செய்ய முடியும்.

