பொங்கோலில் வியாழக்கிழமை (நவம்பர் 5) கிராப் நிறுவனத்தின் தானியக்க வாகனம் ஒன்று, ஒரு சிறுமிமீது மோதவிருந்த சம்பவம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்ட அந்தச் சம்பவம் குறித்த காணொளி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அந்தத் தானியக்க வாகனம் ஒரு சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்புவது பதிவாகியுள்ளது.
வாகனம் நடையர் பாதையை நெருங்கும் வேளையில், வாகனத்தின் இடதுபுறத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமி சாலையைக் கடப்பதற்காக நடைபாதை ஓரத்திலிருந்து கீழே இறங்கி அடியெடுத்து வைப்பதைக் காணொளியில் காணமுடிகிறது.
நடையருக்கும் தானியக்க வாகனத்திற்கும் போக்குவரத்து விளக்குகள் பச்சையாக இருந்தன. வாகனம் நடையர் பாதைக்கு முன்பு நிற்காமல் தம் முன்னால் கடந்துசென்றபோது அந்தச் சிறுமி உடனே நின்றுவிட்டார்.
அதன்பின் ஒரு பெண் அச்சிறுமியை நோக்கி விரைந்து, வாகனத்திடமிருந்து அவரை விலக்கி இழுப்பது தெரிகிறது.
வாகனம் பின்னர் அதன் வேகத்தைக் குறைப்பது போல் தெரிந்தாலும், தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்தக் காணொளியை இதுவரை 260,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
