கிராப் நிறுவனத்தின் டாக்சி பிரிவான கிராப்கேப் இவ்வாண்டின் முதல் காலாண்டில் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் டாக்சிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த வகை கார்களை டொயோட்டாவின் அதிகாரபூர்வ விநியோகிப்பாளர் நிறுவனமான போர்னியோ மோட்டோர்ஸ் சிங்கப்பூர் விற்பனை செய்கிறது.
டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் வகை கார்கள் சிங்கப்பூரில் டாக்சியாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
டாக்சி சேவை வழங்கும் உரிமத்தை 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று கிராப் பெற்றது.
உரிமத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு, மூன்று ஆண்டுகளில் அதன் டாக்சி எண்ணிக்கையைக் குறைந்தது 800ஆக அது அதிகரித்து வருகிறது.
2025ஆம் ஆண்டு இறுதியில் கிராப்கேப்பிடம் 300 டாக்சிகள் இருந்தன.
கிராப் டாக்சி ஓட்டுநர்களுக்கு மேலும் ஒரு தெரிவை வழங்க இந்த டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுவதாக கிராப் நிறுவனம் தெரிவித்தது.
அறிமுகப்படுத்தப்படும் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் டாக்சிகளின் எண்ணிக்கையை அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அவ்வகை டாக்சியை வாடகைக்கு எடுத்து ஓட்ட முடிவெடுக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் வகை கார்களை டாக்சியாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகத் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 11) நிலப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியது.
கிராப் டாக்சியாகப் பயன்படுத்தப்பட இருக்கும் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் ஹைபிரிட் வகை கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்தும் போர்னியோ மோட்டோர்ஸ் சிங்கப்பூர் தகவல் தெரிவிக்கவில்லை.
அவை தொடர்பான விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அது தெரிவித்தது.

