கிராப்கேப் (GrabCab) டாக்சி சேவை வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.
கிராப்கேப் முதலில் 40 டாக்சிகளை இயக்கும். அது, சிங்கப்பூரின் ஆறாவது டாக்சி சேவையாகும்.
கிராப்கேப், கிராப் நிறுவனத்தின் வாடகைச் சேவைப் பிரிவான கிராப்ரென்டல்சுக்குச் சொந்தமானதாகும். அது, பெட்ரோல்/டீசல், மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயங்கும் புதிய ஐந்தாம் வடிவ டொயோட்டா பிரியஸ் கார்களை டாக்சிகளாக நடத்தும்.
மற்றவகை கார்களையும் தங்களின் டாக்சி சேவையில் சேர்க்கவிருப்பதாக கிராப்கேப் தெரிவித்தது. அதன்கீழ், வரும் ஆகஸ்ட் மாதம், மின்சாரம், பெட்டோல்/டீசல் இரண்டிலும் இயங்கும் ஹியுண்டாய் கோனா கார்களும் அதன் டாக்சி சேவைக்குப் பயன்படுத்தப்படும்.
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் கார்களும் இவ்வாண்டின் ஒரு பகுதியில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று கிராப்கேப் குறிப்பிட்டது. புதன்கிழமை (ஜூன் 4) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கிராப்கேப் இத்தகவல்களை வெளியிட்டது.
பயணிகள் சாலையில் கைகாட்டி நிறுத்த வகைசெய்யும் டாக்சி உரிமத்தைப் பெற சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் குறைந்தது 800 டாக்சிகளை இயக்கவேண்டும். டாக்சி சேவை தொடங்கி மூன்றாவது ஆண்டுக்குள் அந்த நிபந்தனையைப் பூர்த்திசெய்யத் தாங்கள் விரும்புவதாக கிராப்கேப் தெரிவித்தது.
கிராப்கேப் வாகனத்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரிடமிருந்து 700லிருந்து 800 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கிராப்ரென்டல்ஸ் இயக்குநர் விக்டர் சிம் தெரிவித்தார். கிராப்கேப் சேவையின் ஆரம்பக் கட்டமாக விண்ணப்பித்தோரில் 400லிருந்து 500 பேர் ஓட்டுநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டாக்சி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டிய பின்னணி இருந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திரு சிம் கூறினார். ஓட்டுநர்கள் பெற்றிருக்கும் தண்டனைப் புள்ளிகள் கருத்தில்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
டாக்சி ஓட்டுநர் உரிமம் இல்லாதோர் அதைப் பெறுவதற்கு அனுமதிபெற்ற பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்படுவர். பயிற்சிக்கான செலவை கிராப்கேப் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.
கிராப்கேப் டாக்சி சேவைக்கான ஒரு நாள் வாடகை 117 வெள்ளி வரை இருக்கலாம். முதல் 100 ஓட்டுநர்களுக்கான அந்த வாடகைத் தொகை 112 வெள்ளியாக இருக்கும்.