தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மன்னிப்பு கேட்டார் அமைச்சர் கிரேஸ் ஃபூ

2 mins read
தஞ்சோங் காத்தோங் புதைகுழி சம்பவம்
f67e1c47-d3c8-4061-9c16-fdd1e96bf18a
புதைகுழி நிகழ்ந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் உருவான புதைகுழி நடந்திருக்கக்கூடாது என்று கூறிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்தத் துரதிருஷ்டமான சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

“அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும், ஒரு வேதனையான அனுபவத்தைச் சந்தித்ததற்கும் காயமடைந்த கார் ஓட்டுநரிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று நேற்று மாலை அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தச் சம்பவம் ஏற்படுத்திய பதற்றத்துக்காகவும் அமைதியின்மைக்காகவும், சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதையில் சென்றதால் வாகன ஓட்டிகளுக்கு, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும், புதைகுழியின் அருகே உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

புதைகுழிக்கு என்ன காரணம் என்பதை ஆராய ஒரு சுயேச்சை விசாரணைக் குழுவை அமைக்குமாறு தனது அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து, கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மூடப்பட்டிருக்கும் தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலைப் பகுதியை மீண்டும் திறப்பதே முன்னுரிமை என்று அவர் மேலும் கூறினார்.

தரை நிலைகளின் நிலைத்தன்மையைச் சரிபார்க்க பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மவுண்ட்பேட்டன் சாலைக்கும் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலைக்கும் இடையிலான தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலைப் பகுதி மூடப்படுவதால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் ஒருவேளை இன்னும் சில நாள்களுக்குச் சிரமப்படக்கூடும் என்று அவர் கூறினார்.

ஜூலை 26ஆம் தேதி மாலையில் ஒரு காரையும் அதன் ஓட்டுநரையும் விழுங்கிய, புதைகுழி ஏற்பட்ட சாலையின் அந்தப் பகுதியை வழக்கநிலைக்குக் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களின் உதவியுடன் ஓட்டுநர் மீட்கப்பட்டு, சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தசை வலி இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

அந்த கார் ஓட்டுநர் இன்னும் மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார் என்று தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.

ஜூலை 28ஆம் தேதி அதிகாலையில், மண், சிமெண்ட், தண்ணீரால் ஆன திரவமாக்கப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட மண்ணால் புதைகுழி மீண்டும் நிரப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்