யூஹுவா தனித்தொகுதியின் எல்லை மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது என்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் ஃபூ புதன்கிழமை (மார்ச் 12) தெரிவித்தார்.
வாக்காளர் எண்ணிக்கை சரிந்து வரும் முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பகுதியாக யூஹுவா தனித்தொகுதி இருப்பதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
“யூஹுவாதான் ஆகச் சிறிய தனித்தொகுதி. அதுமட்டுமல்லாது, வாக்காளர் எண்ணிக்கை குறைந்து வரும் முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டையாக அது இருந்து வருகிறது. எனவே, யுஹுவாவின் தொகுதி எல்லை மாற்றப்படும் என்று எதிர்பார்த்தேன்,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குத் தலைமை தாங்கும் அமைச்சருமான திருவாட்டி ஃபூ கூறினார்.
“மறுமுனையில், விரைவுச்சாலைக்கு அந்தப் பக்கம் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் குடியிருப்புப் பேட்டை உள்ளது. அதில் குடியிருப்பாளர் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) அறிவிக்கப்பட்ட மாற்றங்களின்படி, யூஹுவா தனித்தொகுதியின் சில பகுதிகள் ஜூரோங் குழுத் தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி, ஹோங் கா நார்த் தனித்தொகுதி ஆகியவற்றுடன் சேர்க்கப்பட்டு புதிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதியின் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கும்.
தனித்தொகுதிகளிலேயே யுஹுவா தனித்தொகுதியில் ஆகக் குறைவாக 20,525 வாக்காளர்கள் உள்ளனர்.
புதிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதிக்குத் தலைமை தாங்கும் அமைச்சராக திருவாட்டி ஃபூ இருப்பாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஃபூ, அதைப் பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ஃபூ 2006ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
அப்போதிலிருந்து அவர் யூஹுவா தொகுதியைப் பிரதிநிதித்து வருகிறார்.
யூஹுவா தொகுதி, ஜூரோங் குழுத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
2011ஆம் ஆண்டில் அது தனித்தொகுதியாக உருவாக்கப்பட்டது.
புதிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதியில் 142,510 வாக்காளர்கள் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.