மென்பொருள் உருவாக்கும் இளைய ஊழியர்கள் வழக்கமான நிரலாக்கப் பணிகளுக்காகவே முன்னர் பணியமர்த்தப்பட்டனர்.
தற்போது, செயற்கை நுண்ணறிவு தயாரிக்கும் வரைவு நிரல்களைப் பாதுகாக்கவும், வணிகப் பொருத்தம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் முக்கியக் கண்காணிப்பாளர்களாக அவர்கள் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றனர்.
சாதாரண பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், மென்பொருள் குறியீட்டு வரைவுகளைத் தயார் செய்யக்கூடிய தொடக்கநிலை பணியாளர்களால் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் திருப்தியடைவதில்லை என்று வணிக சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், மனிதவள அமைப்புகள் ஆகியவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளன.
மாறாக, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்துவதோடு, சரியான முடிவெடுக்கும், பகுப்பாய்வு செய்யும் திறனை வெளிப்படுத்துவதே அடிப்படை எதிர்பார்ப்பாகத் தற்போது மாறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவினால் தொழில் வாழ்க்கையின் ‘தொடக்கப் படி’ தகர்ந்துபோகக்கூடும் என்ற அரசாங்கத்தின் கவலைகளுக்கு மத்தியில் அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
மேலும், புதிதாகப் பணியில் சேர்வோர்க்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்குவதில் நிறுவனங்கள் இன்னும் கூடுதலான கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்துவதில் நிறுவனங்கள் இன்னும் ஆர்வமாகவே உள்ளன. இருப்பினும், முந்தைய தொழில் அனுபவமும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பற்றிய அறிவைக் கொண்டவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை கிடைக்கும் என்று வணிக சங்கங்களும் மனிதவள அமைப்புகளும் கூறின.
“பட்டதாரிகள் முதல் வரைவை உருவாக்குவதில் குறைந்த நேரத்தைச் செலவிட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வது, பல்துறை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய பணிகளின் தரத்தை ஆய்வு செய்வது ஆகியவற்றில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்,” என்றார் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோக் பிங் சூன்.
“செயற்கை நுண்ணறிவு முதல் வரைவைத் தயாரிக்கலாம், ஆனால் மனிதர்கள்தான் அதைப் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும்,” என்றார் அவர்.
கடந்த காலத்தில் சமூக ஊடகங்ளுக்கான உள்ளடக்க வரைவுகளைத் தயாரிப்பதிலும் அறிக்கைகளை எழுதுவதிலும் அதிக நேரத்தைச் செலவழித்த இளம் நிர்வாகிகள், இப்போது அந்தப் பணிகளை விரைவுபடுத்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
