‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டுத் திக்கும் எதிரொலிக்க, ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஜூன் 18) பக்திப் பெருவெள்ளத்திற்கு இடையே மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
காலை 9 மணிக்கு, சிவஶ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் கொண்ட கலசங்களைத் தலையில் சுமந்து கோபுரத்தை நோக்கி நடந்தனர்.
ராஜ கோபுரத்திற்கும் மஹா மாரியம்மன் சன்னதியின் கோபுரத்திற்கும் காலை 10 மணிக்குத் திருக்குடங்களிலிருந்து நன்னீர் ஊற்றப்பட்டது.
விழாவின் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா.சண்முகம் கலந்துகொண்டார்.
அவருடன் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸும், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றதைக் குறிக்கும் கல்வெட்டை அமைச்சர் சண்முகம் திறந்துவைத்தார்.
அதன் பிறகு, கோயிலின் இரண்டாம் கட்டப் புதுப்பிப்பு பணிகள் பற்றிய ஒரு சிறிய காணொளியும் திரையிடப்பட்டது.

