ஒன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெரிய சிங்கப்பூர் குடும்பங்கள் புதிய திட்டத்தின்கீழ் இன்று முதல் (செப்டம்பர் 10) $1,000 பெறுவார்கள்.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கான லைஃப்எஸ்ஜி (LifeSG credits (LFLC)) திட்டத்தின்கீழ் முதல் முறையாக இந்தச் சிறப்புத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு 33,000 சிங்கப்பூர்க் குழந்தைகள் தகுதிபெற்றுள்ளனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்திய புதிய பெரிய குடும்பங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதல் வழங்கீடு இது.
மளிகைப் பொருள்கள், மருந்தகப் பொருள்கள், பயனீடுகள், போக்குவரத்து போன்ற வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க இந்தத் தொகையை;ப பயன்படுத்தப்படலாம் என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தத் தொகையை 12 மாதங்கள்வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தகுதிபெறும் பிள்ளைகளின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கின் அறங்காவலர் தொகையைப் பெறுவர். LifeSG செயலி மூலம் அத்தொகையை பெறலாம். தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
குழந்தை ஆறு வயதை எட்டும் வரை குடும்பங்கள் ஒவ்வோர் ஆண்டும் $1,000 தொகையைத் தொடர்ந்து பெறும்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தையும் ஒரு வயதிலிருந்து ஆறு வயது வரை ஆண்டுதோறும் லைஃப்எஸ்ஜி- சிறப்புத் திட்டத்தின்கீழ் $1,000 பெறுவர்.
2019 ஜனவரி 1ஆம் தேதிக்கும் 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் முதல் வழங்கீடாக $1,000 இன்று வழங்கப்படும். இது இந்த ஆண்டில் ஒன்று முதல் ஆறு வயது வரையுள்ள எல்லாக் குழந்தைகளையும் உள்ளடக்கும்.
அடுத்த வழங்கீடு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும். இதில் 2020 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் பிறந்த எல்லாக் குழந்தைகளும் அடங்குவர்.
இதற்கு அப்பால், இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்த மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு, குழந்தை மேம்பாட்டுக் கணக்கு முதல் மானியத்தில் (எஃப்எஸ்ஜி) $5,000 அதிகரிக்கப்பட்டு மொத்தத் தொகை $10,000க்குக் கொண்டுவரப்படும்.
பெரிய குடும்பத்தில் உள்ள குழந்தைக்கும் அவர்களின் உடன்பிறப்புகளுக்கும் பாலர் பள்ளி மற்றும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க இந்தத் தொகையைப் பயன்படுத்தலாம்.
மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்த, $5,000 மருத்துவச் சேமிப்புத் திட்டம் மானியத்தையும் இத்திட்டம் வழங்கும்.
‘ஃபேமிலி ஃபார் லைஃப்’ அமைப்பால் நிர்வகிக்கப்படும் பெரிய குடும்பங்களுக்கான திட்டங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபேர்பிரைஸ், டாடா போன்ற 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் பெரிய குடும்பங்கள் தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய சலுகைகளை வழங்கி வருகின்றன.
குழந்தைப் பொருள்கள், குடும்பத்துடனான போக்குவரத்துச் சேவைகள் போன்றவை இதில் அடங்கும்.
பெரிய குடும்பங்களைக் கொண்டாடுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் இந்த முயற்சியில் சேர அதிகமான நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
பெரிய குடும்பங்களுக்கான சலுகைகள் பற்றிய கூடுதல் விவரங்களை go.gov.sg/lfs-deals என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.