அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உள்ளூர் பண்ணைகளுக்கு மானியம்

அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உள்ளூர் பண்ணைகளுக்கு மானியம்

2 mins read
74806c47-eef3-4809-9cbb-146cb73f127d
பிரைம் அக்குவாகல்சர் ஹேட்சரி பண்ணைக்கு நேரில் சென்ற அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடமிருந்து இரண்டாவது). - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

மத்திய கிழக்குப் பூசலால் அதிகரித்துவரும் செலவுகளைச் சமாளிக்க உள்ளூர் பண்ணைகளுக்கு உதவும் நோக்கில் சிங்கப்பூர் உணவு அமைப்பு புதிய மானியத்தைத் அறிவித்துள்ளது.

ஒருமுறை வழங்கப்படும் புதிய ‘பண்ணை மீள்திறன் ஆதரவு மானியம்’, (Farm Business Resilience Support Grant) உள்ளூர் உணவு உற்பத்தியில் இடையூறு ஏற்படாமல் இருக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.

தொகை அறிவிக்கப்படாத அந்த மானியம், அதிகரித்துள்ள எரிசக்தி, தளவாட, கப்பல் செலவுகளைச் சமாளிக்க உதவும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.

ஏற்கெனவே மனிதவளப் பற்றாக்குறை இருந்துவரும் வேளாண் துறை, அதிகரித்துள்ள செலவுகளால் மேலும் சிரமத்தை எதிர்நோக்குகிறது. உற்பத்தியைப் பெருக்க தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதிய நடவடிக்கை குறித்து அறிவித்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, எரிபொருள், உரம் உள்ளிட்டவற்றின் விலை தொடர்பிலான நெருக்குதல்களைக் கையாள புதிய மானியம் கைகொடுக்கும் என்றார்.

உள்ளூரில் உணவு உற்பத்தி ஆற்றலைத் தொடர்ந்து அதேநிலையில் வைத்திருக்க அரசாங்கம் ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

மேலும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளவும் புதிய மானியம் அவர்களுக்கு உதவும் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

உபின் தீவுக்கு அருகே உள்ள கெத்தாம் தீவில் இருக்கும் பிரைம் அக்குவாகல்சர் ஹேட்சரி பண்ணைக்குச் சென்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

2021ல் ஒதுக்கப்பட்ட நிதி

பண்ணை மீள்திறன் ஆதரவு மானியத்துக்கு, 2021ஆம் ஆண்டு வேளாண் உணவுக் குழும உருமாற்ற நிதியில் இடம்பெறும் தொழில்நுட்ப ஆற்றல் மேம்பாட்டு அம்சத்துக்கு ஒதுக்கப்படும் தொகையிலிருந்து நிதி வழங்கப்படும்.

வேளாண் உணவுக் குழும உருமாற்ற நிதியின் மதிப்பு கிட்டத்தட்ட 60 மில்லியன் வெள்ளியாகும். அந்நிதிக்கு மேலும் 70 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி பண்ணை நடத்துவதற்கான உகந்த உரிமம் வைத்திருந்து உள்ளூரில் புரதச் சத்து போன்றவற்றின் உற்பத்தியில் பங்காற்றியவர்கள் புதிய மானியத்துக்குத் தகுதிபெறுவர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பண்ணைஉதவிமானியம்நிதியுதவி