சிங்கப்பூர் செய்த பேரளவிலான நற்காரியம் நாட்டு மக்களில் முதலீடு செய்ததும் அவர்களுக்குச் சிறந்த தரம் வாய்ந்த கல்வி வளத்தை நல்கியதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்-இந்தியா அரசதந்திர உறவின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சங்கமும் கூகல் நிறுவனமும் ஒருங்கிணைத்த தலைமைத்துவ உச்சநிலை மாநாடு சனிக்கிழமை (செப்டம்பர் 13) கூகல் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் புவிசார் அரசியல் சூழலை மாற்றியமைக்கும் நிகழ்வுகள், உலக மாற்றத்தின் விளிம்பில் தலைமைத்துவம், செயற்கை நுண்ணறிவுமயமான உலகில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனப் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
ஏறத்தாழ இருநூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஒவ்வோர் அமர்விலும் சிங்கப்பூர்ப் பேச்சாளர் ஒருவரும் இந்தியப் பேச்சாளர் ஒருவரும் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் செய்த நற்காரியம் உலக அளவில் இருக்கும் திறன்வாய்ந்த அறிவுசார் வளங்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தது என்றும் அதுவே விலைமதிப்பில்லா சொத்து என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூரின் பொது வீடமைப்புக் கொள்கைகள், சந்தை விலையைவிடக் குறைவாகவும் கட்டுப்படியாகக்கூடிய விலையிலும் விற்கப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் ஆகியவை குறித்து அமர்வின்போது பேசப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த அங்கத்தில், சிறுதீவாக இருந்தபோதும் நாடு கண்டுள்ள வளர்ச்சிக்கான காரணம் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவம், நல்ல நகர்ப்புற நிர்வாகம், சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் என்றும் கூறப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டியவை குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, கூடுதலான நாடுகளுடன் சிங்கப்பூர் உறவை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் பேச்சாளர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் என்பது பன்முகத்தன்மை கொண்டது; ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவில் சீருடன் விளங்கும் நாடுகளும் இந்த அமைப்பில் உண்டு; அதேவேளையில் வணிக அளவில் மின்னிலக்கமயத்தை நடைமுறைப்படுத்துவதில் சவால்களைச் சந்திக்கும் நாடுகளும் உண்டு என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளுக்கு இடையேயான பொருளியல் உறவு என்பது ஒருதரப்புக்குப் பலன் இல்லாமல் இருக்கக்கூடும் என்று சில நாடுகள் கருதுவதை பார்க்க முடிகிறது. ஆனால் பொருளியல் உறவில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. எல்லாநிலையிலும் இருதரப்புகளும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டும் பெற்றுக்கொண்டும்தான் இருக்கின்றன. எனவே அது இருதரப்புக்கும் வெற்றிகரமான சூழல் என்றும் அமர்வின் பேச்சாளர்கள் விளக்கினர்.
இந்தியா-சிங்கப்பூர் உறவின் அடிநாதம் பரஸ்பர நம்பிக்கை என்றும், பசுமைப் பொருளியல், திறன் மேம்பாடு, ஆகாயத் துறை எனப் பல்வேறு துறைகளில் கூடுதலான ஒத்துழைப்புகள் வருங்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பகிரப்பட்டது.
இந்த அமர்வில் ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர் எஸ்ஜி‘ தலைமை நிர்வாக அதிகாரி, முன்னாள் அரசதந்தர அதிகாரி கிஷோர் மஹ்புபானி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரண் குமார் உட்பட பேராளர்கள் பலர் பங்கேற்றனர்.
அனைத்துலக அரங்கில் ஆசியான் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள நட்புறவு, தெற்காசிய நாடுகள் உள்பட சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் கண்டுவரும் மாற்றம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.