சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் ‘கிரேட் ஈஸ்டர்ன் விமென்ஸ் ரன்’ (Great eastern Women’s Run) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஓட்டத்தில் 12,000க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஓட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்நிகழ்வின் மூலம் காப்புறுதி நிறுவனமான கிரேட் ஈஸ்டர்டன், இதுவரை இல்லாத அளவில் 388,000 வெள்ளி நிதி திரட்டியது.
சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கம், உதவி தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவு வழங்கும் ‘டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ’ (Daughters of Tomorrow) ஆகிய அமைப்புகளுக்காக இந்த ஓட்டத்தின் மூலம் நிதி திரட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், இந்த ஐந்து கிலோமீட்டர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். கிரேட்ஸ் ஈஸ்டர்ன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோர் ஹோக் செங்கும் அமைச்சருடன் சேர்ந்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இவ்வாண்டு கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்டத்தில் மூன்றிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ‘மம்மி + மீ, பிரின்செஸ் டேஷ் (Mummy + Me, Princess Dash) ஆகிய பிரிவுகளில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

