ஆரோக்கியமான சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்காகக் குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் வெப்பத்தைப் பொருட்படுத்தாது மரினா அணைக்கட்டைச் சுற்றி ஓடினர்.
‘சிஐஎம்பி’ சிங்கப்பூர் வங்கியின் ஏற்பாட்டில் ‘கிரேட் கிரீன் ரன்’ ஓட்டம் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, மூன்று ஓட்டப் பிரிவுகளை உற்சாகத்துடன் தொடங்கிவைத்தார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
அவருடன் சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நீடித்த நிலைத்தன்மையையும் பசுமையான சுற்றுச்சூழலையும் ஊக்குவிக்கும் வகையில், ஓட்டத்தை நிறைவு செய்தவர்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதக்கத்தை மண்ணில் நட்டுவைத்துச் செடிகளை வளர்க்க உதவலாம். காரணம் அந்தப் பதக்கத்தில் விதைகள் இருக்கின்றன.
கழிவுகளைக் குறைப்பதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதும் சிறப்புப் பதக்கங்களின் நோக்கம்.
மேலும், ஓட்டம் முழுதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளை எதுவும் இல்லை என்பது மற்றொரு சிறப்பம்சம்.
‘தி ஹைவ்’ எனப்படும் விளையாட்டுக்கூடம் பார்வையாளர்களுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், மகரந்தச் சேர்க்கையின் முக்கியத்துவம் முதலியவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமின்றி, மறுபயனீடு செய்யப்பட்ட உடைகள், காலணிகள், அணிகலன்கள், பைகள், கைவினைப் பொருள்கள், உணவு, பானம் என 60க்கும் மேற்பட்ட சிறிய வணிகங்கள் ஒரே கூரையின்கீழ் ஒன்றிணைந்தன.
இந்த ஓட்டம் ‘கோ கிரீன் எஸ்ஜி’ இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
ஓட்டத்தில் பங்கெடுத்த அக்காவின் மகளுக்கு ஆதரவளிக்க வந்திருந்தார் ஆறுமுகம், 57.
“அவள் எப்போதுமே இதுபோன்ற ஓட்டங்களில் பங்கேற்பதுண்டு. இன்று ஓர் உன்னதமான நோக்கத்திற்காக ஓடுகிறாள்,” என்று அவர் தெரிவித்தார்.
நீடித்த நிலைத்தன்மையையும் உடற்பயிற்சியையும் ஒன்றாகச் சேர்ப்பது குறிப்பாக உடற்பயிற்சி ஆர்வலர்களை அதிகம் ஈர்க்கும் என்று பிரமுகா, 29, கூறினார்.
“நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது, பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவது அல்லது முடிந்த அளவுக்கு நடப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்ய முயல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

