இயற்கையைக் கொண்டாட மீண்டும் வந்துவிட்டது ‘பசுமையாவோம் எஸ்ஜி 2026’

இயற்கையைக் கொண்டாட மீண்டும் வந்துவிட்டது ‘பசுமையாவோம் எஸ்ஜி 2026’

4 mins read
4ac17fdd-729d-48e8-9afb-d775863ac84f
செந்தோசா இயற்கைக் கண்டுபிடிப்பு நிலையத்தில் (Sentosa Nature Discovery) உள்ள பல்லுயிர்கள், பாதுகாப்பு முயற்சிகள் குறித்துப் பொதுமக்கள் வழிகாட்டப்பட்ட இலவசச் சுற்றுலாக்களில் பங்கேற்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தலமான செந்தோசா தீவு, வரும் மாதங்களில் அதன் பல்லுயிர் சூழலை முன்னிலைப்படுத்தவுள்ளது.

வழிகாட்டப்பட்ட இலவச சுற்றுலாக்கள்வழி, செந்தோசா இயற்கைக் கண்டுபிடிப்பு நிலையத்தில் (Sentosa Nature Discovery) உள்ள பல்லுயிரியல், பாதுகாப்பு முயற்சிகள் குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். அத்துடன், சிங்கப்பூரிலேயே உழவாரக் குருவிகளின் (Swiftlets) 250க்கும் மேற்பட்ட கூடுகளைக் கொண்ட ராணுவப் பதுங்குக் குழியின் மாதிரியையும் அவர்கள் பார்வையிடலாம்.

செந்தோசா மேம்பாட்டுக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை இணைந்து நடத்தும் அந்தப் புதிய சுற்றுலா, தீவில் வெப்பத்தைக் கையாள உதவும் அம்சங்களையும் அறிமுகப்படுத்தும்.

உதாரணமாக, வெப்பத்தைத் தணிக்க ‘குளிர்ச்சியான மண்டலங்கள்’ (cool nodes) அடுத்த சில ஆண்டுகளில் தீவு முழுவதும் அமைக்கப்படவுள்ளன. நிழல்தரும் கூரைகள், மின்விசிறிகள், மேற்பரப்பு வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் சிறப்பு வண்ணப்பூச்சு போன்ற அம்சங்கள் அவற்றில் இடம்பெறும்.

சிலோசோ கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சியான ஓய்விடம்.
சிலோசோ கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சியான ஓய்விடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘சிலோசோ பீச் ரிசார்ட்’டில் உள்ள நிலையான நடைமுறைகளையும் அதிலுள்ள மண்புழு வளர்ப்பு இடத்தையும் (wormery) பங்கேற்பாளர்கள் பார்வையிடலாம்.

‘சிலோசோ பீச் ரிசார்ட்’இல் உள்ள மண்புழு வளர்ப்பு இடத்தில் (wormery) உள்ள மண்புழுக்கள்.
‘சிலோசோ பீச் ரிசார்ட்’இல் உள்ள மண்புழு வளர்ப்பு இடத்தில் (wormery) உள்ள மண்புழுக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்த வழிகாட்டப்பட்ட சுற்றுலா, 2026ஆம் ஆண்டுக்கான ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கத்தின்கீழ் நடைபெறும் பல நடவடிக்கைகளில் ஒன்றாகும். அவ்வியக்கம் மே 11 முதல் ஜூன் 28 வரை நடைபெறும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தலைமையில் நடைபெறும் அவ்வியக்கத்தில் மக்கள், தனியார், பொதுத் துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 பங்காளிகள் இணைந்துள்ளனர். குடிமக்கள், வர்த்தகங்கள், சமூகத்தை ஒன்றுதிரட்டும் வகையில் 1,000க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகள் அதில் இடம்பெறுகின்றன.

அதிகரித்துவரும் வெப்பநிலை, கடல் மட்டம் உயரும் அபாயம், பருவநிலைத் தகவமைப்பின் அவசியம் ஆகியவை குறித்து, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த ஆண்டு நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.

“பருவநிலைத் தகவமைப்பு என்றால் என்ன, அது அவர்களுக்கு எவ்வாறு பொருத்தமானது என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்வது முக்கியம்,” என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘3பி’ கட்டமைப்புப் பிரிவின் இயக்குநர் குளோரியா டான் கூறினார். வகுப்பறைகளில் கற்பிப்பதைவிட நேரில் பார்ப்பதே சிறந்தது என்பதால், அந்த வழிகாட்டப்பட்ட சுற்றுலாக்கள் அனைவருக்கும் ஒரு நேரடி அனுபவத்தை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

நிலைத்தன்மை என்ற மிகவும் பரந்த தலைப்பில் பலரும் கரிம வெளியேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்றார் செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் நீடித்த நிலைத்தன்மைப் பிரிவு இயக்குநர் ஆண்டனி டான்.

“தீவின் பாதுகாவலர்களாகிய நாங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதோடு நின்றுவிடாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க நமது இயற்கை மரபுடைமையைப் பாதுகாப்பதும் விரிவான அணுகுமுறையைக் கொண்டிருப்பதும் முக்கியம்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

ஜூரோங் தீவில் உள்ள கழிவு சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கற்றல் பயணங்கள், சிங்கப்பூர் ஃபேஷன் கவுன்சிலின் பட்டறைகள், சிங்கப்பூர் புவி ஆய்வகத்தின் (Earth Observatory of Singapore) சுற்றுலாக்கள் போன்ற பல நடவடிக்கைகளும் இவ்வாண்டின் இயக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

முதன்முறையாக நடைபெறும் பல்வேறு புதிய தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் மக்கள் பங்கேற்கலாம்.

2020ல் தொடங்கப்பட்ட ‘குளூப்’ (Cloop) நிறுவனம், சிங்கப்பூரில் ஆடைக்கழிவுகள், அதிகப்படியான நுகர்வு (overconsumption) ஆகிய பிரச்சினைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘குளூப்’ நிறுவனத்தின் வகைப்படுத்தும் நிலையம் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
‘குளூப்’ நிறுவனத்தின் வகைப்படுத்தும் நிலையம் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஆடைகளை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை வாங்குவதற்கும் ஆடைப் பரிமாற்றங்களை (clothing swaps) அந்தச் சமூக நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. அத்துடன், பொதுமக்கள் தங்களின் பழைய ஆடைகள், அணிகலன்கள், பொம்மைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக ஆடை நன்கொடைத் தொட்டிகளையும் அது நிர்வகிக்கிறது.

‘குளூப்’ நிறுவனத்தின் ஆடை வகைப்படுத்தும் வசதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆடைகளைச் சரிசெய்தல், அவற்றின் மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்காக வகைப்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் கைகொடுக்கலாம்.

‘குளூப்’ (Cloop) நிறுவனத்தின் வகைப்படுத்தும் நிலையத்தில், நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களைத் தரத்திற்கு ஏற்ப பிரிக்கும் பணியில் பங்கேற்பாளர்கள் கைகொடுக்கலாம்.
‘குளூப்’ (Cloop) நிறுவனத்தின் வகைப்படுத்தும் நிலையத்தில், நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களைத் தரத்திற்கு ஏற்ப பிரிக்கும் பணியில் பங்கேற்பாளர்கள் கைகொடுக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்த வசதிக்கு வாரந்தோறும் ஏறத்தாழ 1,000 கிலோ ஆடைக்கழிவுகள் வருகின்றன.

பின்னணியில்/திரைக்குப் பின்னால் நடைபெறும் செயல்முறைகள், கடினமான வேலைகள் ஆகியவற்றை சிங்கப்பூரர்கள் நேரில் அனுபவிப்பதன் மூலம், தங்களின் தேவையற்ற ஆடைகளை நன்கொடையாக வழங்குவதோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வுடன் கூடிய நுகர்வுப் பழக்கத்தையும் (mindful consumption) அவர்கள் கடைப்பிடிக்கத் தூண்டப்படுவார்கள் என ‘குளூப்’ இணை நிறுவனர் ஜாஸ்மின் டுவான் நம்புகிறார்.

சிங்கப்பூரின் பருவநிலைக்கு ஏற்ற லினன், பருத்தி போன்ற இயற்கையான துணிகளாலான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட வெப்பத் தகவமைப்பு குறிப்புகளையும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

அச்சுற்றுலாவுக்கான கட்டணம் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு $8, பெரியவர்களுக்கு $15 ஆகும்.

“தாங்கள் நன்கொடையாக அளித்த ஆடைகளுக்கு என்ன நடக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. நன்கொடை அளித்த பிறகு அது அவர்களின் பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறது; பின்னர், அவர்கள் மீண்டும் புதிய ஆடைகளை வாங்குகிறார்கள்,” என்றார் திருவாட்டி ஜாஸ்மின்.

“‘பசுமையாவோம் எஸ்ஜி’ மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் தீர்வின் ஒரு பகுதியாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் www.gogreen.gov.sg என்ற இணையத்தளத்தில் முழு நடவடிக்கைப் பட்டியலைக் காணலாம். இணையப் பதிவு மே 8ஆம் தேதி தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்