சிங்கப்பூர்-ஷாங்காய் நெருக்கம் அதிகரிக்க மாபெரும் வர்த்தக வாய்ப்புகள்

2 mins read
6b459fd0-8ac2-4a11-a9d3-44f120b833a3
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் ஷாங்காய் சீன கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் சென் ஜினிங்கும் வியாழக்கிழமை (நவம்பர் 28) சந்தித்தனர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

ஒத்துழைப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் சிங்கப்பூரும் சீனாவின் நிதித் தலைநகரான ஷாங்காயும் இன்னும் அதிகமாக நெருங்கி செயல்பட முடியும்.

இதனை சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் ஷாங்காய் நகருக்கான சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சென் ஜினிங்கும் கூட்டாகத் தெரிவித்து உள்ளனர்.

இரு நகரங்களுக்கும் இடையில் ஏற்கெனவே வலுவான பொருளியல் இணைப்புகள் உள்ளன. ஷாங்காய் நகரில் மட்டும் 4,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் இயங்குகின்றன.

மேலும், சிங்கப்பூர் நிறுவனங்கள் சீனச் சந்தையில் நுழைவதற்கான முக்கிய நுழைவாயிலாகவும் அந்த நிதி மையம் விளங்குகிறது.

திரு லீ கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாகச் செல்லக்கூடிய நகரம் அது.

“ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது, ஷாங்காய் நகரம் புதிய தொழில்கள், புதிய யோசனைகள் மற்றும் புதிய வாய்ப்புகளுடன் வளம் கொழித்து முன்னேறுவதைக் கண்டு மகிழ்கிறேன்,” என்று அவர் வியாழக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தார்.

சிங்கப்பூரும் ஷாங்காயும் வருங்காலத்தில் ஒத்துழைத்துச் செயல்படுவதற்கான மாபெரும் வாய்ப்புகள் இருப்பதை ஷாங்காய் நகரின் உயர்மட்ட அதிகாரியுமான திரு சென் ஒப்புக்கொண்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஷாங்காய்-சிங்கப்பூர் விரிவான ஒத்துழைப்பு மன்றம் ஏற்படுத்தப்பட்ட பிறகு இரு நகரங்களுக்கும் இடையிலான வர்த்தகம் 20 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டு சீனாவும் சிங்கப்பூரும் 35 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாட இருப்பதாகக் குறிப்பிட்ட திரு சென், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான பெரிய பங்களிப்பைச் செய்வதில் ஷாங்காய் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரு நகரங்களுக்கும் இடையிலான வர்த்தகம் 15 விழுக்காடு அதிகரித்து 61.57 பில்லியன் யுவானாக (S$11.4 பில்லியன்) வளர்ந்தது.

சிங்கப்பூருக்கான ஷாங்காய் நகரின் ஏற்றுமதி வலுவாக வளர்ந்தது அதற்கு முக்கிய காரணம்.

2023 ஜூன் நிலவரப்படி, ஷாங்காயின் ஆகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு நகரம் சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 முதலாம் பாதியில் அதன் முதலீடு US$25.99 பில்லியனைத் (S$34.9 பில்லியன்) தொட்டது.

அதேபோல, 2022ஆம் ஆண்டிறுதி நிலவரப்படி, சீனாவில் சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப்பெரிய முதலீட்டு நகரம் ஷாங்காய் ஆகும். முதலிடத்தில் ஜியாங்சு மாநிலம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்