மசே நிதியிலிருந்து மாதம் $4,600 வழங்குதொகை பெறும் பெண்

ஓய்வுக்காலக் கணக்கில் தொடர்ந்து பணம் நிரப்பியவருக்கு அதிகப் பலன்

மசே நிதியிலிருந்து மாதம் $4,600 வழங்குதொகை பெறும் பெண்

2 mins read

சிங்கப்பூரில் ஓய்வுபெற்ற 71 வயதுப் பெண்ணுக்கு மத்திய சேம நிதிக் (சிபிஎஃப்) கணக்கிலிருந்து மாதந்தோறும் கிட்டத்தட்ட $4,600 வழங்குதொகை கிடைக்கிறது.

அவரே ஆக அதிக வழங்குதொகையைப் பெறுபவராக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அவரின் ஓய்வுக்காலக் கணக்கில் அதிகப் பணம் இருப்பதே அதற்குக் காரணம்.

இன்றைய நிலையில் அவரின் வழங்குதொகை வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது. 55 வயது உறுப்பினர் ஒருவர், 2026ஆம் ஆண்டில் சிபிஎஃப் லைஃப் திட்டத்தின் உச்சக்கட்டமான $440,800வரை பணத்தைப் போட்டால்கூட, 65ஆம் வயதில் அவருக்குக் கிடைக்கக்கூடிய மாதாந்தர வழங்குதொகை $3,400ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் திருவாட்டி ஜேனட் (புனைபெயர்), அதிக வழங்குதொகையைப் பெறுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுவது இயல்பே. ஜேனட், 55ஆம் வயதில் திட்டத்தில் சேர்ந்த பிறகு கடந்த 16 ஆண்டாக, அவரின் ஓய்வுக்காலக் கணக்கில் ஆண்டுதோறும் அக்கறையுடன் பணத்தை நிரப்புவதே அதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இன்னொரு காரணமும் உண்டு. அவர் வழங்குதொகையை 65 வயதிலிருந்து பெறவில்லை. அதைத் தாமதப்படுத்தி, 70 வயதிலிருந்துதான் பெறத் தொடங்கியிருக்கிறார் ஜேனட்.

ஓய்வுக்காலக் கணக்கில் தாமாக முன்வந்து எந்தப் பணத்தையும் நிரப்பாமல் இருந்த அவரின் வயதுடைய மற்றவர்களைக் காட்டிலும் ஜேனட்டுக்குக் கிட்டத்தட்ட ஐந்து மடங்கிற்கும் கூடுதலான வழங்குதொகை கிடைக்கிறது. ஓய்வுக்கால வருவாயை அவர் நன்கு திட்டமிட்டு, ஓய்வுக்காலக் கணக்கில் விடாமல் பணத்தைப் போட்டு நிரப்பியதே அதற்கு முக்கியக் காரணம்.

இதே நிலையில், சேம நிதி மாதாந்தர வழங்குதொகையின்மூலம் ஜேனட்டுக்கு ஆண்டுதோறும் ஏறக்குறைய $55,000 கிடைக்கும். அதற்கு அவர் வரி செலுத்த வேண்டியதுமில்லை.

ஜேனட் 63 வயதாக இருந்தபோது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகும் அவர் சேம நிதிச் சந்தாவைச் செலுத்தியதால், சாதாரணக் கணக்கு (OA), மெடிசேவ் கணக்கு (MA) இரண்டிலும் $1 மில்லியனுக்கும் மேல் சேர்ந்திருந்தது. அதன் மூலம் அவருக்கு ஆண்டு வட்டியிலிருந்து குறைந்தது $30,000 வருமானமாகக் கிடைக்கும்.

அதன்படி, அவருடைய மாத வருமானத்தையும் சேர்த்து, சேம நிதியிலிருந்து மட்டும் அவருக்குக் கிடைக்கும் வருடாந்தர ஓய்வுக்கால வருவாய் ஏறக்குறைய $85,000 அல்லது மாதத்திற்குக் கிட்டத்தட்ட $7,000.

ஓசிபிசி நிதி நலன் ஆய்வின்படி, மாத வருமானமாக ஏறக்குறைய $6,000 கிடைக்கும்படி திட்டமிடும் ஒருவர் வசதியான வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடியும். தனியார் வீட்டில் வசித்துக்கொண்டு, ஒரு கார் வைத்துக்கொள்ளலாம். வீட்டில் உதவிக்குப் பணியாளரை நியமித்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு இரு முறை வெளிநாடுகளுக்கு நீண்ட விடுமுறையில் சென்றுதிரும்பலாம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்தின் ‘இன்வெஸ்ட்’ அங்கத்துக்கு எழுதிய மின்னஞ்சலில் ஜேனட் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “உலகின் ஆகச் சிறந்த ஓய்வூதியத் திட்டம், சிபிஎஃப். 4 விழுக்காட்டு வட்டி விகிதத்தைப் பெற அனைவரும் ஓய்வுக்காலக் கணக்கில் அதிகபட்சத் தொகையைப் போடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். வங்கிகளிடமிருந்தோ இதர நிறுவனங்களிடமிருந்தோ அந்த அளவுக்கு வட்டி விகிதத்தைப் பெற வாய்ப்பே இல்லை.”

குறிப்புச் சொற்கள்