உலக நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்று அரசாங்கங்கள் மாறியுள்ளபோதிலும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களைப் பொறுத்தவரை உலக நாடுகளிடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் செவ்வாய்க்கிழமை (மே 8) தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பில் சிங்கப்பூர் தொடர்ந்து பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
மற்ற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றி சிங்கப்பூரால் உறுதியாகச் சொல்ல முடியாதபோதிலும் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை உணர முடிவதாக அவர் கூறினார்.
“நாம் தயாராகும் வரை பருவநிலை மாற்றம் காத்துக்கொண்டிருக்காது. தயார்நிலை தாமதமடைந்தால் மாற்றங்கள் சிரமமிக்கவையாக இருக்கும். சிங்கப்பூரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பங்களிப்போம். கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்” என்று தெமாசெக் அறநிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற நீடித்த, நிலைத்தன்மை மாநாட்டில் திரு டியோ உரையாற்றினார்.
கரிம வெளியேற்றம் குறைவாக இருக்கும் உலகில், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் அதன் பொருளியலைத் தயார்ப்படுத்தும் என்றார் அவர்.
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தற்போதைவிட எதிர்காலத்தில் உலகம் சூடாக இருக்கும் என்றார் அவர்.
அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சிங்கப்பூரர்களைக் காக்க தயாராகி வருவதாகத் திரு டியோ தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டுள்ள சில முடிவுகளால் நீடித்த, நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
உதாரணத்துக்கு, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலக இருப்பதாக உலகிலேயே பேரளவில் கரிம வெளியேற்றம் கொண்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாது, உலகளாவிய பருவநிலை உடன்பாடு தனக்குப், பொருத்தமானதல்ல என்று இந்தோனீசியா தெரிவித்துள்ளது.
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அழுத்தம் அரசாங்கங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் இருப்பது தமக்குப் புரிகிறது என்றார் திரு டியோ.
ஆனால், நீண்டகால இலக்கு அவசியமானது என்று அவர் நினைவூட்டினார். அப்போதுதான் தற்போதைய தேவைகள் பூர்த்தியாவதுடன் எதிர்காலத் தேவைகள் மீதும் கவனம் செலுத்தலாம் என்றார் அவர்.