மத்திய கிழக்குப் போர்: பயணிகளுக்கான விமான எரிபொருள் தீர்வை தள்ளிவைப்பு

சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

மத்திய கிழக்குப் போர்: பயணிகளுக்கான விமான எரிபொருள் தீர்வை தள்ளிவைப்பு

2 mins read
4d9aed9f-0be6-4a85-baf5-18fa129bc3a8
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளுக்குத் தூய விமான எரிபொருள் தீர்வை 2027 ஜனவரி முதல் விதிக்கப்படும் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளுக்கான பசுமை விமான எரிபொருள் தீர்வை (Green jet fuel levy) தள்ளிவைக்கப்படுவதாக சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (மார்ச் 25) அறிவித்துள்ளது.

புதிய மாற்றத்தின்படி, இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு வாங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டில், 2027 ஜனவரி 1 முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இந்த தீர்வை விதிக்கப்படும். அடுத்த ஜனவரி மாதப் பயணத்துக்கு அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்னால் வாங்கப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு தீர்வை விதிக்கப்படாது.

முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு வாங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டில், அக்டோபர் முதல் தேதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் பயணிகளுக்கு தூய எரிபொருள் தீர்வை விதிக்கப்படுவதாக இருந்தது.

சிங்கப்பூரிலிருந்து எகனாமி வகுப்பில் பயணம் செய்பவர்கள் $1 முதல் $10.40 வரையிலும், பிசினஸ், முதல் வகுப்பில் பயணம் செய்பவர்கள் $4 முதல் $41.60 வரையிலும் தூய எரிபொருள் தீர்வையைச் செலுத்த வேண்டியிருக்கும். பயண தூரம், வகுப்பிற்கு ஏற்ப கரிம உமிழ்வு மாறுபடுவதால் தீர்வையின் அளவு வேறுபடுகிறது.

பல நிறுத்தங்களைக் கொண்ட பயணங்களுக்கு, சிங்கப்பூரிலிருந்து சென்றடையும் முதல் இடத்தின் அடிப்படையில் தீர்வை விதிக்கப்படும்.

வசூலிக்கப்படும் தொகை மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத தூய விமான எரிபொருள் வாங்கப்படும்.

பயணிகள், பயணச்சீட்டுக் கட்டணத்துடன் தீர்வையைச் செலுத்துவார்கள்.

தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்தில்கொண்டு தீர்வை விதிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு ஹான் கோக் ஜுவான் கூறினார்.

வான்வழிப் போக்குவரத்தில் கரிம வெளியீட்டைக் குறைப்பதில் சிங்கப்பூர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீர்வை தள்ளிவைப்பு, சரக்கு, தனியார் விமானங்களுக்கும் பொருந்தும்.

எனினும், சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யும் பயணிகள், பயிற்சி விமானங்கள் மற்றும் மனிதாபிமான நோக்கங்களுக்காக இயக்கப்படும் விமானங்களுக்கு இந்தத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்