தொழில்நிறுவனங்கள் செழிக்க பசுமைக் கடன்கள்

தொழில்நிறுவனங்கள் செழிக்க பசுமைக் கடன்கள்

படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

12 Feb 2026 - 6:50 pm

2 mins read

நிறுவனங்கள் ஆற்றல்வாய்ந்த, நீடித்த நிலையான தீர்வுகளில் முதலீடு செய்வதற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தொழில் நிறுவன நிதியாதரவுத் திட்டம் வழி பசுமைக் கடன்களுக்கு ஆதரவளிக்கப்படவுள்ளது.

வரவுசெலவுத் திட்ட உரையின்போது இதுபற்றி குறிப்பிட்ட திரு வோங், இம்முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் எரிசக்தி செயல்திறன் மானியமும் விரிவாக்கப்படும் என்று கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பிலான நடவடிக்கைகளை சிங்கப்பூர் பொறுப்புடன் கையாளும் என்று உறுதியளித்த பிரதமர், நிறுவனங்கள் எரிசக்தி ஆற்றல் வாய்ந்த, நிலையான தீர்வுகளைத் தந்திடும் திட்டங்களில் கவனம் செலுத்த இத்திட்டம் உதவிக்கரம் நீட்டும் என்று மேலும் கூறினார்.

வரவுசெலவுத் திட்ட உரையில் கரிம வரி குறித்தும் பேசினார் அவர்.

2027ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்துலக அளவில் காணப்படும் நிலவரத்திற்கேற்ப சிங்கப்பூரின் கரிம வரி மதிப்பீடுகள் அமையும்.

உலகளாவிய பருவநிலைச் சூழலில் தாக்கம் ஏற்பட்டால் 2030ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூரின் கரிம வரி டன்னுக்கு $50 முதல் $80 வரை என்ற அளவை எட்டும்.

2 கிகாவாட் எனும் சூரிய சக்தி சார்ந்த பயன்பாட்டு இலக்கை சிங்கப்பூர் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தை விட முன்கூட்டியே எட்டியதால், 2030ஆம் ஆண்டிற்குள்ளாக அடைய வேண்டிய பயன்பாட்டு இலக்கு 3 கிகாவாட்டாக உயர்த்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பையும் நீடித்த நிலைத்தன்மையையும் பேணுவதற்கான இலக்குகளும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன.

விமானப் போக்குவரத்து, கடல்சார் துறைகளும் பசுமை மயமாக்கலை எதிர்கொள்ளும் என்ற திரு வோங், வருங்காலத் தலைமுறைகள் வாழ்வதற்கேற்ற நிலையான, மீள்திறன் வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
பட்ஜெட் 2026வரவுசெலவுத் திட்டம் 2026சிங்கப்பூர்நாடாளுமன்றம்