பசுமைக் கப்பல் போக்குவரத்து: ஆராய்ச்சிக்கு உதவும் சிங்கப்பூர்-நார்வே

பசுமைக் கப்பல் போக்குவரத்து: ஆராய்ச்சிக்கு உதவும் சிங்கப்பூர்-நார்வே

படம்: அன்ஸ்பிலா‌ஷ்

07 Nov 2026 - 12:37 pm

1 mins read

அனைத்துலகக் கப்பல் போக்குவரத்தில் வெளியாகும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கச் சிங்கப்பூரும் நார்வேயும் இணைந்துள்ளன.

இதற்காகப் புதிய தொழில்நுட்பங்கள், தீர்வுகளை உருவாக்க இரு நாடுகளும் கூட்டு ஆராய்ச்சி மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டத்தில் சிங்கப்பூரின் கடல்துறை, துறைமுக ஆணையம், சிங்கப்பூர் கடல்துறை கல்விநிலையம், நார்வேயின் ஆராய்ச்சி மன்றம் ஆகியவை இணைந்துள்ளன.

இந்த முயற்சிக்குச் சிங்கப்பூர் தரப்பிலிருந்து 2.7 மில்லியன் வெள்ளி வரையிலும் நார்வே 2.7 மில்லியன் வெள்ளி வரையிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இரு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் பங்காளிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிக்கு அந்த நிதி உதவும். தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை ஆதரவு கிடைக்கும்.

மாற்று எரிபொருள்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இந்த மானியம் ஆதரவளிக்கும். அத்துடன், கப்பல்களின் எரிசக்தித் திறனை அதிகரிப்பது, கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது, பசுமைச் செயல்பாடுகளுக்கான மின்னிலக்க முறை ஆகிய மூன்று பிரிவுகளில் இது கவனம் செலுத்தும்.

சிங்கப்பூர்-நார்வே கூட்டு கடல்துறை மானியத்தின் மூன்றாவது ஆராய்ச்சி நிதித் திட்டம் இதுவாகும். இதற்கு முன் 2015, 2018ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்