‘கிரோ’ ஏஐ: மாணவர்கள் பயன்படுத்த நல்வாய்ப்பு

‘கிரோ’ ஏஐ: மாணவர்கள் பயன்படுத்த நல்வாய்ப்பு

2 mins read
43113bd6-6753-4048-9dde-9e67a2b80741
கிரோ மென்பொருளை ஒட்டிய விளையாட்டு. - படம்: அமேசான் வெப் சர்வீசஸ்

மென்பொருள் திறன்களை மேம்படுத்துவதற்காக ‘கிரோ’ (Kiro) என்ற மென்பொருளைக் குறிப்பிட்ட அளவுக்கு இனி இலவசமாகப் பயன்படுத்தலாம்.

அனைத்துப் பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 1,000 இலவசப் பயனீட்டுப் புள்ளிகள் கிடைக்கவிருக்கின்றன. இதனை ‘அமேசான் வெப் சர்வீசஸ்’ (Amazon Web Services - AWS) புதன்கிழமை (மே 6) அறிவித்தது.

2025 நவம்பர் முதல் உலகளவில் பொதுவாகக் கிடைக்கும் ‘கிரோ’, அமேசானின் ஏஜென்டிக் மேம்பாட்டுச் சூழலாகும் (Agentic IDE). நல்ல யோசனைகளுக்கு உருக்கொடுத்து உயிர்ப்பிக்கும் வன்மையைக் ‘கிரோ’ கொண்டுள்ளது.

வர்த்தகச் செயல்முறைகளை ஒழுங்குபடுத்த முயலும் வணிக மாணவர், நோயாளிகளின் சேர்க்கையை மேம்படுத்த முனையும் சுகாதாரத்துறை மாணவர், பாடத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய விரும்பும் விரிவுரையாளர் என அனைவருக்கும் தொழில்முறை ஒழுக்கத்துடன் ஒத்துப்போகும் கட்டமைப்புகளைத் தயாரிக்க ‘கிரோ’ உதவுகிறது.

பெரும்பாலான ஏஐ நிரல் கருவிகள் ஆணைத்தொடரை (prompt) உருவாக்கும் வேளையில், கிரோவிற்கு முதலில் ‘ஸ்பெக்’ (spec) எனப்படும் விவரக்குறிப்பு தேவைப்படுகிறது. எந்தவொரு நிரல் வரியும் எழுதப்படுவதற்கு முன்னர், தேவையான விவரங்களை இயல்பான மொழியில் உள்ளீடு செய்யக்கூடிய தளமாக ‘கிரோ’ உள்ளது.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கும் அதைக் கொண்டு தரமான பொருள் ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக அமேசானின் சிங்கப்பூருக்கான அனைத்துலகப் பொதுத்துறை நிர்வாகி எல்சி டான் தெரிவித்தார்.

“நீங்கள் செய்த வேலையை மற்றொருவர் எளிதாகப் புரிந்துகொண்டு தொடர முடிவதில் உங்கள் உண்மையான திறமை வெளிப்படுகிறது. நிறுவனங்களும் முதலாளிகளும் எப்போதும் நம்பிப் பயன்படுத்தக்கூடிய படைப்புகளையே எதிர்பார்க்கிறார்கள். சிங்கப்பூர் பட்டதாரிகள் இத்தகைய உயர்தரமான நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்பதே இப்பயிற்சியின் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

‘கிரோ’ மென்பொருளைத் தனது பாடத்திட்டத்தில் சேர்த்த முதல் கல்வி நிலையமான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, அமேசானுடன் 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கடந்த ஏப்ரலில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, மாணவர்களுக்காக ‘ஸ்பெக்’ முறையின் அடிப்படையில் இரண்டு நாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. அதில், ‘சேட்போட்’ எனப்படும் பதில் வழங்கும் தளத்தை மாணவர்களால் கிரோவைக் கொண்டு உருவாக்க முடிந்தது.

“செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் பொருளியலுக்காக மாணவர்களைத் தயார்ப்படுத்துவதில் அமேசான் வெப் சர்வீஸ் உடனான கூட்டு முயற்சி முக்கிய அங்கம் வகிக்கிறது,” என்று ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தகவல், தொடர்புப் பள்ளி இயக்குநர் வோங் வாய் லிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்