உணவு விநியோக நிறுவனமான டெலிவரூ, அதன் மளிகைப் பொருள் விநியோகச் சேவைகளை விரிவுபடுத்த ஷெங் சியோங் பேரங்காடி நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.
சிங்கப்பூர் முழுதும் உள்ள 21 ஷெங் சியோங் பேரங்காடிகள் தனது தளத்தில் இணைந்துள்ளதாக டெலிவரூ திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தெரிவித்தது. பிப்ரவரி இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 31ஆக உயர்த்த டெலிவரூ திட்டம் கொண்டுள்ளது.
ஷெங் சியோங்கிடமிருந்து 5,000க்கும் அதிகமான பொருள்களை வாடிக்கையாளர்கள் எந்நேரமும் வாங்கலாம். டெலிவரூ தளத்தில் பொருள்களை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் அவை வீடு வந்துசேரும்.
இந்த விநியோகச் சேவை அறிமுகம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக புதிய, ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு விலைச் சலுகை வழங்க ஷெங் சியோங்குடன் இணைந்து தான் செயலாற்றி வருவதாக டெலிவரூ கூறியது. பிப்ரவரி 15 முதல் 28 வரை குறைந்தது $40 செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு $6 தள்ளுபடி கிடைக்கும்.

