பார்வையற்றோர்க்கான வழிகாட்டிச் செயலி மேலும் 15 இடங்களுக்கு விரிவாக்கம்

பார்வையற்றோர்க்கான வழிகாட்டிச் செயலி மேலும் 15 இடங்களுக்கு விரிவாக்கம்

2 mins read
6fc1f91c-d1d7-49c7-95d6-6bc1d222d926
சைனாடவுன் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே ‘வேமேப்’ செயலியின் செயல்முறை விளக்கத்தை அளித்தார் அதன் தென்கிழக்காசியத் தலைவர் அன்செல்ம் டி மெலோ. - படம்: வேமேப்
multi-img1 of 2

பார்வைத்திறனற்றோர் பொதுப் போக்குவரத்துப் பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘வேமேப்-எஸ்ஜி’ (Waymap-SG) என்ற ஒலிவழிகாட்டிச் செயலி தற்போது மேலும் 15 முக்கியப் போக்குவரத்து இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையத்திலும் டௌன்டவுன் பாதையிலுள்ள தெம்பனிஸ் பெருவிரைவு ரயில் நிலையத்திலும் இச்செயலி சோதித்துப் பார்க்கப்பட்டது.

தற்போது ஈஷூன் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம், மரினா பே, டோபி காட், ஊட்ரம் பார்க் ஆகிய சந்திப்பு நிலையங்கள் உள்ளிட்ட 15 இடங்களுக்கு அச்செயலி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வேமேப்-எஸ்ஜி செயலியானது எம்ஆர்டி நிலையங்களிலும் பேருந்து முனையங்களிலும் ஒலிமூலம் படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகிறது.

இச்செயலி நிலத்தடியிலும் உட்புறப் பகுதிகளிலும் தடங்காட்டி (ஜிபிஎஸ்) அல்லது இணையத் தொடர்பு இல்லாமலேயே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திறன்பேசிகளில் உள்ள முடுக்கமானி (accelerometer), சுழல்மானி (gyroscope) போன்ற உணர்கருவிகளையும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அது இயங்குகிறது.

பயனர்கள் எடுத்து வைக்கும் அடிகளின் நீளத்தைக் கணக்கிட்டு, திரும்ப வேண்டிய இடங்கள், மின்தூக்கிகள், மின்படிகள், வெளியேறும் வழிகள் குறித்த துல்லியமான ஒலி வழிகாட்டுதலை இச்செயலி வழங்குகிறது.

நிலையங்களில் இதற்கெனத் தனியாகப் புதிய உள்கட்டமைப்புகள் எதையும் நிறுவ வேண்டிய தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம்.

பார்வையற்றோர் சங்கப் பயனர்களைக் கொண்டு கடந்த 2025 டிசம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ஒலி வழிகாட்டுதலின் தெளிவு, அவை ஒலிக்கும் நேரம் உள்ளிட்ட பல கூறுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட வேமேப் செயலி, அந்நாட்டின் லண்டன், பர்மிங்ஹம், அமெரிக்காவின் வாஷிங்டன், ஆஸ்டின், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் எனப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் தற்போது பொங்கோல் வட்டார நூலகத்திலும் அச்செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

“பார்வைத்திறனற்றோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் தாங்களாகவே வெளியில் சென்று வருவதற்கு இத்தகைய தொழில்நுட்பங்கள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன,” என்று சிங்கப்பூர்ப் பார்வைத்திறனற்றோர் சங்கத்தில் 2022 முதல் 2025 வரை செயற்குழு உறுப்பினராக இருந்த திரு ஜோஷ் செங் கூறினார்.

இரு விழிகளிலும் ஐந்து விழுக்காடு மட்டுமே பார்வைத்திறனைக் கொண்டுள்ள இவர், வேமேப்-எஸ்ஜி செயலியைப் பரிசோதித்துப் பார்த்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்