இவ்வாண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரின் 60 ஆம் ஆண்டின் நிறைவைக் குறிக்கும் எஸ்ஜி60, இன நல்லிணக்க மாதமாகவும் கொண்டாடப்பட உள்ளது.
அதையொட்டி, நாட்டின் ஆகப் பழமையான நான்கு கோயில்களை அனைத்து சமயத்தினரும் குறிப்பிட்ட நாள்களில் கண்டு களிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு இந்து அறக்கட்டனை வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் அனைத்து சமயத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் இந்துக் கோயில்களின் பாரம்பரிய சிறப்பு, வரலாறு, வடிவமைப்பு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர். இந்த நான்கு கோயில்களும் 1800களிலிருந்து சமூகத்திற்கு பங்களித்துள்ளன. இவற்றில் இரண்டு கோயில்கள் தேசிய மரபுடைமைச் சின்னங்களாக அரசிதழில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகியவையே அந்த நான்கு கோயில்களாகும்.
வருகையாளர்கள் கோயில்களை வழிகாட்டுதலுடன் சுற்றிப் பார்த்து, அங்கிருக்கும் கைவினைப் பொருள் காட்சிகள், பாரம்பரிய நாட்டிய, பாடல் நிகழ்ச்சிகளையும் கண்டு, கேட்டு ரசிக்கலாம். இவற்றுடன், பூ கட்டுவது, தோரணங்கள் கட்டுவது போன்றவற்றிலும் ஈடுபடலாம் என்று இந்து அறக்கட்டளை வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) கூறியது.
மேலும், வருகையாளர்கள் கோயில் சாப்பாட்டை ருசிப்பதுடன் தனித்துவமான நினைவுப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
வருகையாளர்கள் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை கோயில்களுக்குள் செல்லலாம்.
சைனாடவுனில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஜூலை 12ஆம் தேதியும் கேலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில் ஜூலை 5ஆம் தேதியும் வருகையாளர்களை வரவேற்கும்.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஜூலை 19ஆம் தேதியிலும், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஜூலை 27ஆம் தேதியில் வருகையாளர்களை வரவேற்கிறது.
இதற்கு வருகையாளர்கள் https://bit.ly/hnfs25 என்ற இணையப்பக்கம் வழி பதிவு செய்து கொள்ளலாம்.