சிங்கப்பூரின் சில பகுதிகளில் புகைமூட்டம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், மணிநேர பிஎம்2.5 அளவீடுகளின் அடிப்படையில் முதலாளிகள் வெளிப்புற வேலைகளை மாற்றியமைப்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்டது.
24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு முன்னுரைப்பை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே நடைமுறையிலுள்ள வழிகாட்டுதல்களுக்குக் கூடுதலாக இந்த புதிய நெறிமுறைகள் அமைந்துள்ளன.
இவை, பகல் நேரத்தில் ஏற்படும் காற்றுத் தர மாற்றங்களுக்கு ஏற்ப உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க முதலாளிகளுக்கு உதவும் என்று மனிதவள அமைச்சு தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த நாளுக்கான வெளிப்புற வேலைகளைத் திட்டமிட முதலாளிகள் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு முன்னுரைப்பைப் பயன்படுத்த வேண்டும்.
அதேவேளையில், பகல் நேரத்தில் வெளிப்புற வேலைகளில் மாற்றங்களைச் செய்ய 1 மணி நேர பிஎம்2.5 அளவீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சு கூறியது. பிஎம்2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைந்த விட்டம் கொண்ட நுண்துகள்களைக் குறிக்கிறது. புகைமூட்டக் காலத்தில் சுகாதாரத்தைப் பாதிக்கும் முதன்மைத் தூய்மைக்கேட்டுப் பொருளாக இதுவே திகழ்கிறது.
1 மணி நேர பிஎம்2.5 அளவீடுகள் நிலவும் காற்றுத் தரத்தைப் பற்றிய அண்மைய நிலவரத்தை வழங்குகின்றன. மாறாக, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு என்பது அன்றாட காற்றுத் தரத்தின் குறியீடாகவும் தேசிய சுற்றுப்புற அமைப்பின் அன்றாட சுகாதார ஆலோசனைகளுக்கான அடிப்படையாகவும் விளங்குகிறது.
மாறிவரும் காற்றுத் தரத்திற்கு ஏற்ப விரைந்து செயல்படவும், வெளிப்புற வேலை ஏற்பாடுகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்கவும் இந்தக் கூடுதல் வழிகாட்டுதல் முதலாளிகளுக்கு உதவும் என்று மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.
“புகைமூட்டம் குறித்து முதலாளிகள் விழிப்புடன் இருக்குமாறும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் புகைமூட்டத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்கள் மீது தனி கவனம் செலுத்துமாறும் நான் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.
1 மணி நேர பிஎம்2.5 அளவீடுகள் அதிகரிக்கும்போது முதலாளிகள் வெளிப்புற வேலைகளைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. மூத்தோர், கர்ப்பிணிகள், நாட்பட்ட இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்கள் ஆகியோர் காற்றின் தரம் மோசமடையும்போது சிரமமான வெளிப்புற வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
காற்றின் தரம் மோசடையும்போது ஆரோக்கியமான ஊழியர்கள் சிரமமான வெளிப்புற வேலைகளைக் குறைக்க வேண்டும் என்றும் பிஎம்2.5 அளவீடுகள் அதிகமாக இருக்கும்போது அத்தகைய வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
பிஎம்2.5 அளவீடுகள் அதிகமாக இருக்கும்போது சிரமமான வெளிப்புற வேலைகளைத் தவிர்க்க முடியாத சூழலில் என்95 அல்லது அதற்கு இணையான முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தும் வெளிப்புற வேலைகளைத் தவிர்க்க முடியாவிட்டால் முகக்கவசங்கள் அல்லது பொருத்தமான சுவாசக் கருவிகள் வழங்கப்படுவதோடு ஊழியர்களுக்கு மணிநேர உட்புற ஓய்வு நேரங்களும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.
