இளம் வயதினர் மனநலச் சேவைகளைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், உதவி கோரும் இளம் வயதினருக்குத் தடையாக இருக்கக்கூடிய ‘பெற்றோரின் ஒப்புதல்’ தொடர்பான சிக்கலும் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை (நவம்பர் 11) அறிவித்தது.
இந்த வழிகாட்டுதல்கள், இளம் வயதினர் மனநலச் சேவைகளை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதோடு, அவர்களின் நலனையும் தனியுரிமையையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
குணமடையும் செயல்முறையை வலுப்படுத்தும் வகையில்’ பெற்றோரை ஈடுபடுத்துவதும் அதன் மற்றொரு நோக்கமாகும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பொதுக் கலந்தாய்வு ஆவணத்தின்படி, வழிகாட்டுதல் சேவைகளின் தன்மையைப் பொறுத்து ஒப்புதல் தேவை அமையும்.
அடிப்படைச் சேவைகளைப் பொறுத்தவரை, 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு மனநலப் பரிசோதனை அல்லது நோய் கண்டறிதலுக்கு வழிவகுக்காத மனநல மதிப்பீடு மேற்கொள்ளப்படும்போது பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அதேபோல் மனநல சிகிச்சைச் சேவைகளுக்குப் பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்று சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளது. இதில் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை போன்ற உளவியல் சிகிச்சைகளும் பள்ளிகளில் வழங்கப்படும் ஆலோசனை சேவைகளும் அடங்கும்.
பெற்றோரின் ஒப்புதலைப் பெற முடியாத சூழலில், பராமரிப்பு வல்லுநர் இளம் வயதினருக்கு இத்தகைய சேவைகளை வழங்கலாம். அந்தச் சிகிச்சை அந்த இளையரின் நலனுக்குத் தேவையானது என்று பராமரிப்பு நிபுணர் மதிப்பிட்டிருக்க வேண்டும். இளையர் குறைந்தபட்சம் 13 வயதுடையவராக இருக்க வேண்டும்.
ஓர் இளையர் தமது பெற்றோரிடம் ஒப்புதல் கேட்க மறுப்பது, அல்லது மனநல சேவைகளைப் பெற முயற்சி செய்யும்போது பெற்றோர் மறுப்பது போன்ற சூழ்நிலைகளில் மறுப்பிற்கான காரணங்களை ஆராய பராமரிப்பு வல்லுர்களுக்கு வழிகாட்டுதல் பரிந்துரைக்கிறது.
முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள், பள்ளி, சமூக அமைப்புகளில் மனநல உதவியை நாடும் இளையர்களின் அனுபவங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் இளையள் மீள்திறன் ஆய்வுத் தரவைச் சுட்டிக்காட்டிய அமைச்சு, இங்கு 10 முதல் 18 வயதுக்குட்பட்டோரில் மூவரில் ஒருவருக்கு மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநலப் பாதிப்புகள் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
இளம் வயதினர் மனநலப் பராமரிப்பைப் பெறுவதற்குத் துணைபுரியும் வலுவான கொள்கைகளை உருவாக்குவதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் பொதுமக்களின் பங்களிப்பை அமைச்சு கோருகிறது.
பொதுக் கலந்தாய்வு நவம்பர் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறும்.
