வரலாற்றில் முதன்முறையாக உலகக் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் 267ஆம் புதிய போப்பாக அமெரிக்காவின் கார்டினல் ராபர்ட் பிரவோஸ்ட், 69, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கார்டினலாகப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டிற்குள்ளாக அடுத்த போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கார்டினல் ராபர்ட், அமெரிக்காவின் வடபகுதியில் பிறந்து தெற்கில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
1955 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சிகாகோவில் உள்ள இலினோயில் பிறந்தவரான கார்டினல் ராபர்ட், இனிக் கத்தோலிக்க வழக்கப்படி திருத்தந்தை பதினான்காம் (XIV) லியோ என்றழைக்கப்படுவார்.
சிகாகோவில் இறையியல் பட்டம் பெற்ற திருத்தந்தை 14ஆம் லியோ, பெருவின் பியூராவில் மறைப்பணிக்காக அனுப்பப்பட்டவர்.
காலஞ்சென்ற திருத்தந்தை பிரான்சிசால் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், திருப்பீட ஆயர் பேரவைக்கான தலைவராகவும், லத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டவர் திருத்தந்தை 14ஆம் லியோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராகப் போற்றப்படும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் ஏப்ரல் 28ஆம் தேதி காலமானதையொட்டி, அடுத்த போப் யார் என்பதைத் தேர்வு செய்ய ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய சிஸ்டின் சிற்றாலயத்துக்குத் திரும்பினர்.
மே 7ஆம் தேதி அதற்கான சடங்குபூர்வ நடைமுறை தொடங்கியது.
இந்த முறை சாதனை அளவாக 70 நாடுகளைச் 80 வயதுக்குட்பட்ட 133 கார்டினல்கள் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாள்களாக ரகசிய வாக்களிப்பில் எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில் அடுத்த திருத்தந்தைக்கான தேர்வு முடிவுக்கு வந்துள்ளது. இதனை உலகிற்கு அறிவிக்கும் வகையில், சிங்கப்பூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (மே 9) அதிகாலை சிஸ்டின் சிற்றாலயத்தின் சிறப்புப் புகைக்கூண்டிலிருந்து வெண்புகை வெளியானது.
அதனைத் தொடர்ந்து, வத்திகன் நேரப்படி வியாழக்கிழமை (மே 8) இரவு 7.30 மணியளவில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் மேல்மாடத்தில் புதிய போப் தோன்றினார்.
‘‘உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்!” என்று இத்தாலிய மொழியில் கூறி தமது முதல் வாழ்த்துரையையும் நல்லாசியையும் மக்களுக்கு அவர் வழங்கினார்.
புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை லியோவுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
புதிய போப் தெரிவாகியுள்ள செய்தியைக் கத்தோலிக்கர்கள் சமூக ஊடகங்கள் வழியாக தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துவருகின்றனர்.
மே 9 வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நேரம் மாலை 5.30 மணியளவில் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கார்டினல்களுக்கான திருப்பலியினை நிறைவேற்றுகிறார் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ.
வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 11) வத்திகன் வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து தமது முதல் திருவுரையினை அவர் நிகழ்த்தவிருக்கிறார்.