தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுத்தர வயதுப் பெண்களில் பாதிப் பேருக்கு மனநலக் கவலை

2 mins read
ac308fb7-4e3c-471c-82f0-de656e0fe61b
பாலின சமத்துவத்துக்கு நடவடிக்கை எடுப்பதற்கான மாநாட்டில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள நடுத்தர வயதுப் பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் மனநலம் குறித்த கவலைகளை எதிர்நோக்குகின்றனர்.

எனினும், அவர்களில் 59 விழுக்காட்டினர் மட்டுமே அவற்றுக்கு நிபுணர்களை நாடியது தெரிய வந்துள்ளது. நிபுணத்துவ உதவி நாடாதோரில், 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், தாங்கள் பிறருக்குப் பாரமாக இருக்க விரும்பாததே அவ்வாறு செய்யாததற்குக் காரணம் எனத் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் மாதர் சங்கங்கள் மன்றம், ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் இம்மாதம் நடத்தி வரும் கருத்தாய்வின் முதற்கட்ட முடிவுகளில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. 40லிருந்து 59 வயதுக்கு உட்பட்ட பெண்களிடையே இருக்கக்கூடிய மனநலன் குறித்த கருத்துகளை அறிய அந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

தற்போது தொடரும் அந்தக் கருத்தாய்வு 1,000 பெண்களைச் சென்றடைய இலக்குக் கொண்டுள்ளது.

முதலில் 300 பெண்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட முடிவுகள், பாலின சமத்துவத்துக்கு நடவடிக்கை எடுப்பதற்கான மாநாட்டில் (Summit for Action on Gender Equality) வெளியிடப்பட்டன. அந்த மாநாடு திங்கட்கிழமை (செப்டம்பர் 29) ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடைபெற்றது.

மாதவிடாய் எவ்வாறு நடுத்தர வயதுப் பெண்களின் வாழ்க்கையிலும் வேலையிலும் பாதிக்கிறது, சமூகம் எவ்வாறு அந்த அம்சங்களை மேலும் நன்கு புரிந்துகொண்டு நடக்கலாம் ஆகியவற்றை மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

“பலருக்கு 60 வயதானதும் பெண்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை,” என்றார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான டாக்டர் ரஸ்வானா பேகம்.

கடந்த பல ஆண்டுகளாக அரசாங்கம் பெண்களுக்கு அதிகம் செய்துள்ளது; இருந்தாலும் மேலும் ஏதேனும் செய்ய முடியுமா என்று தாம் சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டுக்கான ஐக்கிய நாட்டுச் சபை பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டில் (2024 United Nations Gender Inequality Index), 166 நாடுகளில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தில் வந்தது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சிங்கப்பூர் முதலிடத்தில் வந்தது.

மாநாட்டில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பெண்கள் மேம்பாட்டில் சிங்கப்பூர் கடந்த 60 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறினார். அதற்கு வழிவகுக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வரைந்து செயல்படுத்தியதாக அவர் சுட்டினார்.

பெண்கள் மேம்பாட்டுக்கான 10 ஆண்டுத் திட்டம், சம்பளத்துடன் தந்தைமை விடுப்பு வழங்கி பெற்றோரிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதது போன்றவை அவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், மனப்போக்கை மாற்றும் முயற்சிகளில் சிங்கப்பூர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் புதிய சவால்களுக்கு மத்தியிலும் முன்னேற்றம் தொடர கூடுதல் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் திரு மசகோஸ் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்