போதைப்பொருள் கைதிகளுக்கு நல்வழி காட்டும் இடைநிலை மறுவாழ்வு இல்லங்கள்

போதைப்பொருள் கைதிகளுக்கு நல்வழி காட்டும் இடைநிலை மறுவாழ்வு இல்லங்கள்

3 mins read
14d51bbb-d860-43db-9a6f-94c09f3ed5e8
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆ‌‌ஷ்ரம் இடைநிலை மறுவாழ்வு இல்லம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப்பொருள் குற்றவாளிகள் தண்டனைக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இடைநிலை மறுவாழ்வு இல்லங்களில் இருந்தால் மீண்டும் குற்றம் புரியக்கூடிய சாத்தியம் குறைவு என்று சிங்கப்பூர்ச் சிறைச் சேவை தெரிவித்திருக்கிறது.

பொதுவாகச் சிறையில் இருக்கும் அத்தகைய கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்ட பிறகு அதனைக் கூறியுள்ளது சிறைச் சேவை.

2019ஆம் ஆண்டுக்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஈராண்டுக்குள் மீண்டும் போதைப்பொருள் குற்றச்செயலில் ஈடுபட்டோரின் விகிதம் இடைநிலை மறுவாழ்வு இல்லத் திட்டத்தில் சேர்ந்தோரிடையே குறைவாக இருந்தது என்று சிறைச் சேவையின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் சென்ற வாரம் கூறினார்.

போதைப்பொருள் குற்றங்கள் என்று சொல்லும்போது உட்கொள்வது, வைத்திருப்பது, கடத்துவது முதலியவை அவற்றுள் அடங்கும்.

போதையர் மறுவாழ்வு நிலையத்திலிருந்து இடைநிலை மறுவாழ்வு இல்லத் திட்டத்தில் சேர்ந்த கைதிகளில் ஈராண்டுக்குள் மீண்டும் குற்றம் புரிந்தோரின் விகிதம் 2022ல் 23.5 விழுக்காடு. ஒட்டுமொத்தக் குழுமத்தின் விகிதமான 29.7 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு.

சராசரியாக, ஆண்டுதோறும் சமூக அடிப்படையிலான திட்டங்களில் போதையர் மறுவாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 600 கைதிகள் சேர்கின்றனர். அவர்கள், தண்டனைக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இடைநிலை மறுவாழ்வு இல்லம் அல்லது வேலைக்குச் சென்றுதிரும்பும் முகாமில் இருக்கின்றனர்.

சென்ற ஆண்டு (2025) போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக முதன்முறை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 விழுக்காடு கூடுதலாகி 1,165 ஆனது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வருடாந்தரப் புள்ளிவிவரங்களிலிருந்து அந்தத் தகவல் தெரியவந்தது.

ஏற்கெனவே போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைதானவர்கள் மீண்டும் குற்றம் புரிவதற்கான சாத்தியம் முதன்முறையாகக் கைதுசெய்யப்பட்டோரை விட மூன்று மடங்கு அதிகம் என்று பேச்சாளர் கூறினார்.

குடும்ப ஆதரவு இல்லாத கைதிகளுக்கு இடைநிலை மறுவாழ்வு இல்லத் திட்டங்கள் உதவுவதாக அவர் சொன்னார். அத்தகையோர் சமுதாயத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கு முறையான கட்டமைப்புச் சூழல் இருப்பது அவசியம் என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 11 இடைநிலை மறுவாழ்வு இல்லங்களுக்குச் சிறைச் சேவை ஆதரவளிக்கிறது. ஒரே நேரத்தில் அங்கு மொத்தம் ஏறக்குறை 800 பேர் தங்கியிருக்கலாம்.

போன ஆண்டு ஜனவரியில் இடைநிலை மறுவாழ்வு இல்லச் சேவை மேம்படுத்தப்பட்டது. இடைநிலை மறுவாழ்வு இல்லப் பங்காளித்துவ அமைப்புகளின் எண்ணிக்கை 9லிருந்து 11க்குக் கூடியது.

சிங்கப்பூரில் சிறைச் சேவையுடன் பணியாற்றுபவற்றுள் ஆகப் பெரியது செலராங் இடைநிலை மறுவாழ்வு இல்லம். அதில் ஆண்டுதோறும் 700 முதல் 800 பேர் வரை சேர்கின்றனர்.

இடைநிலை மறுவாழ்வு இல்லங்களில் மற்றொன்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆ‌‌ஷ்ரம். முன்னாள் போதைப்புழங்கிகளின் வாழ்வைச் சீரமைத்து மீண்டும் உருவாக்கித் தருவதற்கு அது முனைப்புடன் செயல்படுகிறது.

கடந்த 26 ஆண்டில், கிட்டத்தட்ட 800 முன்னாள் குற்றவாளிகள் ஆ‌‌ஷ்ரம் இடைநிலை மறுவாழ்வு இல்லத்தின் மூலம் பலன்பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் ஏறக்குறைய 30 பேர் இல்லத்திற்கு வருவதாகத் தமிழ் முரசிடம் சொன்னார் ஆ‌‌ஷ்ரம் இல்லத்தின் தலைவர் விஜய்குமார் சேதுராஜ்.

முன்னாள் குற்றவாளிகளின் மனவுறுதியையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஆ‌‌ஷ்ரம் பல்வேறு திட்டங்களை வழங்குவதாக அவர் தெரிவித்தார். திறன் மேம்பாடு, தன்முனைப்புப் பேச்சு, சமூக நிகழ்ச்சிகள், வேலைச் சந்தை முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் திரு விஜய்குமார் கூறினார்.

“முன்னாள் குற்றவாளிகளின் வெற்றி, சமுதாயத்தின் வெற்றி. சிறைச் சேவையுடனும் பங்காளித்துவ, சமூக அமைப்புகளுடனும் அணுக்கமாகப் பணியாற்றுவதன் மூலமே அதனை அடைய முடியும். போதைப்புழக்கத்தைத் தடுக்கவும் முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றம் புரியும் விகிதத்தைக் குறைக்கவும் நாடாளவிய நிலையில் எடுக்கப்படும் முயற்சிகளில் பங்கெடுப்பதில் ஆ‌‌ஷ்ரம் பெருமை கொள்கிறது,” என்றார் திரு விஜய்குமார்.

கூடுதல் செய்தி: சபா. முத்து நடராஜன்

குறிப்புச் சொற்கள்