அலெக்சாண்ட்ரா வில்லேஜ் உணவங்காடி நிலையத்தில் உள்ள பழச்சாறுக் கடை உரிமையாளர் ஒருவரின் வலக்கை தற்செயலாகக் கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்டது. பின்னர் அவரது கை இயந்திரத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை (மார்ச் 9) இரவு 9 மணியளவில் 120 புக்கிட் மேரா லேன் 1 என்ற முகவரியில் செயல்படும் உணவங்காடி நிலையத்திலிருந்து உதவி கோரி ஓர் அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்புப் படை வீரர்கள், பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள், குடிமைத் தற்காப்புப் படையின் உதவி மருத்துவ அதிகாரி ஆகியோர் இணைந்து அந்த நபரை மீட்பதில் ஈடுபட்டனர்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர மருத்துவக் குழுவும் மருத்துவ உதவியை வழங்க சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இரவு 10.45 மணியளவில் கடை உரிமையாளரின் கை இயந்திரத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், தூக்குப் படுக்கையில் ஏற்றப்பட்டபோது அவரது விரல்களில் கட்டு போடப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் சீன நாளிதழான சாவ்பாவ் கூறியது.
அந்த நபர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த உணவங்காடி நிலையத்தில் உள்ள மற்றொரு கடை உரிமையாளர், பாதிக்கப்பட்டவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்றும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு கடை நடத்தி வருகிறார் என்றும் சாவ்பாவிடம் தெரிவித்தார்.
குவீன்ஸ்டவுன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எரிக் சுவா, காயமடைந்தவரின் குடும்பத்திற்குத் தமது ஆதரவை வழங்குவதற்காக இரவு 11 மணியளவில் அந்த உணவங்காடி நிலையத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

