சிங்கப்பூரில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து கட்டடங்களையும் வளாகங்களையும் பாதுகாப்பதற்கான வழிகாட்டி கையேட்டை பொதுப் பயனீட்டுக் கழகம் வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியிட்டுள்ளது.
வெள்ள மீள்திறன் மேம்பாடுகளுக்கான இந்த 99 பக்க கையேடு, நில உரிமையாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்களுக்குத் தேவையான வெள்ளத் தடுப்பு ஆலோசனைகளையும் ஆபத்து மதிப்பீட்டையும் வழங்குகிறது.
வெள்ள மீள்திறனை அடைவது அனைத்துத் தரப்பினரும் பகிர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பு என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது தெரிவித்தார்.
கடலோரப் பாதுகாப்பு குறித்த தென்கிழக்காசிய மாநாட்டில் வியாழக்கிழமை அவர் உரையாற்றினார்.
வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒவ்வொரு கட்டடம், குடியிருப்பு, குடும்பத்தின் கூட்டுப் பொறுப்பு என்றார் அவர்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிங்கப்பூரின் 30 விழுக்காட்டு நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. வரும் 2,100ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் சராசரி கடல் மட்டம் 1.15 மீட்டர்வரை உயரக்கூடும். புயல், கடல் அலைகளின் சீற்றத்தால் அது ஐந்து மீட்டர்வரை உயர வாய்ப்புள்ளது என்றார் அவர்.
புதிய கையேட்டில் நகரும் வெள்ளத் தடுப்புகள், வெளிப்புற சுவர்களுக்கான நீர்ப்புகா பூச்சுகள், வெள்ளத்தைத் தடுக்க உயர்த்தப்பட்ட வாயில்கள் போன்ற பல்வேறு நடைமுறை ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
சொத்து உரிமையாளர்கள் தங்கள் இடத்தின் தன்மைக்கேற்ப சிறந்த முடிவுகளை எடுக்க இது உதவும். தங்ளின் வணிக வளாகத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்புச் சுவர்கள், தானியங்கி எச்சரிக்கை உணர்கருவிகள், தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய, மடக்கக்கூடிய தடுப்புகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன போன்ற உள்ளூர் உதாரணங்களும் இதில் விளக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், கடலோரப் பாதுகாப்புத் துறையில் திறமையான வல்லுநர்களை உருவாக்க, பொதுப் பயனீட்டுக் கழகமும் சிங்கப்பூர் நீர் சங்கமும் இணைந்து ஒரு புதிய திறன், தகுதி கட்டமைப்பை உருவாக்கவுள்ளன.
கடலோரப் பொறியியல் போன்ற சிறப்புத் திறன்களைக் கொண்ட எதிர்கால பணியாளர்களைத் தயார்படுத்தும் இந்தக் கட்டமைப்பு, 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிறைவடையும்.

