அப்பர் புக்கிட் தீமா சாலையில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் நவம்பர் மாதம் பாதிரியார் ஒருவர் தாக்கி காயப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1ஆம் தேதி) அந்த தேவாலயத்தில் மடக்குக் கத்தி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தனது மடக்குக் கத்தியை தனது கால்சட்டைப் பைக்குள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி காவல்துறை டிசம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அந்த 36 வயது ஆடவர் வேலை செய்யும் கைவினைத் தொழிலர் என்றும் ஒரு கைவேலைக்குப் பின்னர் கத்தியை தமது தொழிலுக்குப் பயன்படுத்தும் மற்ற கருவிகளோடு வைக்க மறந்துவிட்டதாகவும் தெரிவித்தது. முன்னதாக, அவர் ஒரு வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் காவல்துறை அறிக்கை விளக்கியது.
இது குறித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை தனது அறிக்கையில், டிசம்பர் 1ஆம் தேதி காலை 11.30 மணி கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் தேவாலய பாதுகாப்புத் தொண்டூழியர் ஒருவர் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த நபர் கத்தி வைத்திருந்தது தெரியவந்ததாக தெரிவித்தது. அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.
காவல்துறையினரிடம் அந்த ஆடவர் அந்தக் கத்தியை தாமாக முன்வந்து ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.