ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மூடப்பட உள்ளது. அது, கலப்பு பயன்பாட்டு கட்டடமாக மறுமேம்பாடு காண உள்ளது.
அலுவலகம், சில்லறை வர்த்தக இடங்களை உள்ளடக்கிய புதிய 33 மாடிக் கட்டடம் 2031ஆம் ஆண்டின் முதல் பாதியில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், 26 மாடி ‘ஏ’ தர அலுவலகங்கள் இருக்கும் என்று அக்கட்டத்தின் உரிமையாளரும் சொத்துச் சந்தை நிறுவனமுமான மேப்பள்டிரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியது.
123,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தத் திட்டத்தில், அமையும் நீர்முகப்பு நடைபாதைக்கு அருகே 13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பூங்கா இடம்பெறும். குத்தகைதாரர்களும் பார்வையாளர்களும் சிங்கப்பூர் நீரிணையை ரசிப்பதுடன் நீர்முகப்பில் நடந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் மகிழலாம் என்று மேப்பள்ட்ரீ கூறியது.
கிழக்கில் விவோசிட்டி, ஹார்பர்ஃபிரன்ட் டவர்ஸ், மேற்கில் புதிய இரண்டு மாடி சொகுசு கப்பல் படகு முனையம் ஆகியவற்றை ஒட்டி இந்த மேம்பாடு இடம்பெறுவதாக அது குறிப்பிட்டது.
2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் தற்போதுள்ள ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள புதிய வளாகத்தில் முனையம் தனது நடவடிக்கைகளைத் தொடங்கும்.
ஹார்பர்ஃபிரன்ட் நிலையம், வடகிழக்கு வட்டப் பாதைகளில் உள்ள ஹார்பர்ஃபிரன்ட் எம்ஆர்டி நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் வட்ட ரயில் பாதை கட்டி முடிக்கப்பட்டதும் இணைப்பு மேலும் விரிவாகும் என்று மேப்பிள்ட்ரீ தெரிவித்தது.

