தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026 பிற்பாதியில் புதிய தற்காலிக முனையத்திற்கு இடமாறும் ஹார்பர்ஃபிரன்ட் பயண முனையம்

2 mins read
2020749b-e8b5-4fcf-8bfd-3eb2496fa0d4
ஹார்பர்ஃபிரன்ட் சென்டருக்குப் பக்கத்தில் கட்டப்படும் புதிய தற்காலிக ஹார்பர்ஃபிரன்ட் பயண முனையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹார்பர்ஃபிரன்ட் பயண முனையத்தில் இடம்பெறும் படகு, உல்லாசக் கப்பல் சேவைகள், 2026 பிற்பாதியில் புதிய தற்காலிக முனையத்திற்கு மாற்றப்படும் என்று முனையத்தை இயக்கும் சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

1992 முதல் ஹார்பர்ஃபிரன்ட் சென்டரில் அனைத்துலக முனையமாக இது செயல்பட்டு வந்துள்ளது. ஹார்பர்ஃபிரன்ட் சென்டரை அதன் உரிமையாளரும் சொத்துச் சந்தை நிறுவனமுமான ‘மேப்பள்ட்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ மறுசீரமைக்க இந்த நடவடிக்கை வழிவகை செய்கிறது.

தற்போதைய முனையத்திற்குப் பக்கத்தில் உள்ள தற்காலிக முனையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் 2026 பிற்பாதியில் அது செயல்படத் தொடங்கும் என்றும் சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையத்தின் தலைமை நிர்வாகி ஜேக்கலின் டான் தெரிவித்தார்.

ஹார்பர்ஃபிரன்ட் சென்டரில் தற்போதுள்ள ஹார்பர்ஃபிரன்ட் பயண முனையம்.
ஹார்பர்ஃபிரன்ட் சென்டரில் தற்போதுள்ள ஹார்பர்ஃபிரன்ட் பயண முனையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டுமானம் 2024ல் தொடங்கி, இந்த ஆண்டிறுதியில் நிறைவடையத் திட்டமிடப்பட்டு உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.

தற்போதைய முனையம், அனைத்துலக உல்லாசக் கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகமாக உள்ளது. மேலும், சிங்கப்பூருக்கும் இந்தோனீசியத் தீவுகளான பாத்தாம், கரிமுன் இரண்டுக்கும் இடையே படகுப் பயணச் சேவைகளை அது வழங்குகிறது.

‘மேப்பள்ட்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையம், தனா மேரா, பாசிர் பாஞ்சாங் இரு படகு முனையங்களையும் இயக்குகிறது.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கிற்கு முழுக்கச் சொந்தமானது ‘மேப்பள்ட்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’. 97,700 சதுர மீட்டர் பரப்பளவிலான ஹார்பர்ஃபிரன்ட் சென்டரை மறுசீரமைக்க, நகர மறுசீரமைப்பு ஆணையத்திடமிருந்து 2023 முதல் இடைக்கால அனுமதி பெற்றுள்ளது மேப்பள்ட்ரீ.

புதிய தற்காலிக முனையத்தில், அலுவலகப் பயன்பாட்டிற்காக 101,326 சதுர மீட்டரும் சில்லறை வர்த்தகத்திற்காக 42,000 சதுர மீட்டரும் இடமிருக்கும்.

மறுசீரமைக்கப்படும் ஹார்பர்ஃபிரன்ட் சென்டரில் புதிய படகு, உல்லாசக் கப்பல் முனையம் இருக்குமா, மறுசீரமைப்புக்கான காலக்கெடு என்ன என்பது குறித்து கருத்து தெரிவிக்க மேப்பள்ட்ரீ மறுத்துவிட்டது. தற்காலிக முனையம் எவ்வளவு காலம் செயல்படும் என்பதையும் சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையம் தெரிவிக்கவில்லை.

ஹார்பர்ஃபிரன்ட் பயண முனையத்தில் உள்ள படகு நிறுவனங்கள், 2026 இடமாற்றம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றாலும், தற்காலிக முனையத்தில் எப்போது பணிகள் தொடங்கும் என்பது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.

குறிப்புச் சொற்கள்