பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி சொல்ல ‘ஹேஷ்டேக்’ அறிமுகம்

பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி சொல்ல ‘ஹேஷ்டேக்’ அறிமுகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Nov 2026 - 4:32 pm

2 mins read

ரயில் சேவைத் தடங்கல்கள் விரக்தியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் 2018ல் கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் நியோ ஷுன் கீட் சந்தித்த ஒரு சிறிய தாமதம், 33 வயதான அவரை எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் சேரத் தூண்டியது.

அங்கு அவர் கண்ட தொழில்முறை அணுகுமுறையே, அப்போது சமையலறை உதவியாளராக இருந்த அவரைத் தொழில் மாறத் தூண்டியது என்று அவர் கூறினார்.

நான்கு ஆண்டுகளாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நியோ, அந்தத் தாமதத்தின்போது, ​​பயணிகள் ரயிலிலிருந்து இறங்கியதும் அவர்களுக்கு மாற்று வழிகளையும் புதிய தகவல்களையும் வழங்க எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் தயாராக இருந்ததாகக் கூறினார்.

“பெரும்பாலான ரயில்கள் ஓட்டுநர் இன்றி இயங்கும் சூழலில், அவர்கள் அந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதமும், தகவல்களைப் பரிமாறிக்கொண்ட முறையும் என்னைக் கவர்ந்தன,” என்று கூறினார் திரு நியோ. இவர் தற்போது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உள்ள அனைத்து 27 நிலையங்களையும் மேற்பார்வையிடுகிறார்.

சனிக்கிழமை (நவம்பர் 7) ஹில்லியன் மாலில் நடைபெற்ற பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான பாராட்டு விழாவில், கௌரவிக்கப்பட்ட 20 பொதுப் போக்குவரத்து ஊழியர்களில் இவரும் ஒருவர்.

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பைத் தொடர்ந்து இயங்க வைக்கும் களப்பணியாளர்கள், திரைக்குப் பின்னால் பணியாற்றும் ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், பேருந்து ஓட்டுநர்கள், எம்ஆர்டி நிலையப் பணியாளர்கள், பணிமனைகளில் பணியாற்றுபவர்கள் உட்பட சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

“பொதுப் போக்குவரத்துத் துறையில் எவரும் தனித்துச் செயல்படுவதில்லை. தண்டவாளங்களிலும் பணிமனைகளிலும், எங்களது பராமரிப்புக் குழுவினர் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டு, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர்.

“சாலைகளில், யாரும் தனித்து இருப்பதில்லை. பேருந்து ஓட்டுநர் தனியாகத் தெரிந்தாலும், அவர் எப்போதும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பிலேயே இருக்கிறார்,” என்று நிதித்துறை இரண்டாம் அமைச்சருமான திரு சியாவ் கூறினார்.

பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் பங்களிப்பைப் பயணிகள் உணர்ந்துகொள்ள ஊக்குவிக்கும் வகையில், #ThankYouPTWorkers என்ற அதிகாரபூர்வ ஹேஷ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள் சமூக ஊடகங்களில் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்குத் தங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ளலாம்.

உமா புருஷோத்தமன்.
உமா புருஷோத்தமன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘கோ-அஹெட் சிங்கப்பூர்’ நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றும் உமா புருஷோத்தமன், பயணிகள் காட்டும் அன்பும் பாராட்டும் தமது நாளை மகிழ்ச்சியானதாக மாற்றுகின்றன என்று கூறினார்.

“இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நாங்கள் எங்கள் பணியைச் செய்கிறோம் என்றாலும், பயணிகள் இதுபோன்ற பாராட்டுச் செயல்களை வெளிப்படுத்தும்போது, ​​நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்துஎஸ்எம்ஆர்டிபேருந்துரயில் சேவை