நான்கு மொழிகளிலும் பேசி அசத்திய ஹஸ்லினா

2 mins read
804424c5-659e-491e-b4aa-ce4970e144af
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில் கடைசியாகப் பேசிய திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம் (ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி) தம்மைத் தேர்ந்தெடுத்த தமது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கினார்.

அவர் ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் மொழிகளில் பேசினார். அவர் கட்டமைக்க விரும்பும் சிங்கப்பூரை விவரிக்கும் மூன்று பழமொழிகளை மேற்கோள் காட்டினார்.

மலாய் மொழியில், “மக்களின் பலம் அதன் ஒற்றுமையில் உள்ளது,” என்றார் அவர்.

முதியோரைப் பராமரிப்பதும் நம்மைச் சேர்ந்தவர்களை மற்றும் பிறரைப் பராமரிப்பதும் பற்றி மாண்டரின் மொழியில் அவர் பேசினார்.

மேலும் தமிழில், “தொடர்ந்து போராடுவதும் தோல்வியடையாமல் இருப்பதும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.

“எறும்பு ஊரக் கல்லும் தேயும். மனந்தளர விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், இந்தக் கூற்றிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

“என் தாத்தா பாட்டி தமிழில் பேசினார்கள். நான் போதுமான அளவு கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு நாள் கற்றுக்கொள்வேன்,” என்று திருவாட்டி ஹஸ்லினா தமிழில் பேசினார்.

முதியவர்கள் நல்லபடியாகவும் கண்ணியத்துடனும் முதுமை அடைய வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என்று திருவாட்டி ஹஸ்லிமா கூறினார்.

முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

ஃபெங்ஷானில் வசிப்பவர்களை வீடு வீடாகச் சந்திக்கும்போது, ​​தனியாக வசிக்கும் முதியவர்களை அடிக்கடி சந்திப்பதாக திருவாட்டி ஹஸ்லினா விவரித்தார்.

இதனால்தான், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, துடிப்பாக மூப்படைடைதல் நிலையங்கள், அந்த நிலையங்களின் தோழர்கள் மற்றும் மூத்த தலைமுறை அலுவலகம் ஆகியவற்றின் பணிகள் மிகவும் முக்கியமானதாகி வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திருவாட்டி ஹஸ்லிமா தமது உரையை முடித்தவுடன், நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், “சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் பேசக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரிய பட்டியலில் நீங்களும் சேர்ந்திருக்கிறீர்கள்,” என்று பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்பாராட்டுநாடாளுமன்ற நாயகர்